மின்சாரம் உற்பத்தி செய்யும் நெய்வேலி நிலக்கரி சுரங்கத்தின் (என்.எல்.சி.) அருகில் ‘பிளாக்’ என்ற பெயரில் பல குடியிருப்புப் பகுதிகள் அமைந்துள்ளன. இவற்றில் 21 மற்றும் 30 ஆகிய பிளாக்குகளில் வசிக்கும் பத்தாயிரம் குடும்பங்களின் பல ஆண்டு கனவே மின்சாரம்தான். எங்கள் நிலைமையை ‘தமிழக அரசியல்’ மூலம் வெளிச்சம் போட்டுக் காட்டுங்களேன். எங்கள் வாழ்வில் வெளிச்சம் பிறக்கட்டும்’’
தொலைபேசியில் இப்படி நமக்கு வேண்டுகோள் வைத்தார் இந்து மக்கள் கட்சியின் கடலூர் மாவட்டத் தலைவர் பழனிமுருகன்.
திருநெல்வேலிக்கே அல்வா என்பதைப் போல மின்சாரம் உற்பத்தி செய்யும் நெய்வேலியின் மடியிலேயே இருட்டு கிராமங்களா? என்ற ஆச்சர்யத்துடன் 21, 30-ம் பிளாக்குகளுக்குச் சென்றோம். கிராமத்தின் நுழைவு வாயிலில் வீட்டு வாசலில் லாந்தர் விளக்குக்கு, எண்ணெய் ஊற்றி திரி போட்டுக் கொண்டிருந்த மீனாவிடம் பேசினோம். ‘‘ரெண்டு தலைமுறையாக இங்கதான் இருக்கோம். எங்க கிராம மக்கள் என்.எல்.சி.யிலதான் வேலை செய்யுறாங்க. கூடை பின்னி, கீரை வித்தும் பொழைப்பு ஓடுது. எட்டிப் பாக்குற தூரத்துல என்.எல்.சி. இருந்தும் நாங்க சுமார் 50 வருஷமா இருட்டுதலதான் இருக்கோம். 21, 30 பிளாக் கிராமங்கள்ல மின்சார வசதியே கிடையாது. புள்ளைங்க படிக்க முடியலை. மத்தவங்க மாதிரி வாழ முடியலை. கரன்ட் மட்டுமில்ல வசிக்க நல்ல குடிசை, குடிநீர் எதுவுமே இல்லை.
மின் இணைப்பு கேட்டு பல முறை என்.எல்.சி.கிட்ட மனு கொடுத்துட்டோம். ஆனா, ஒரு சில வீடுகளுக்கு மட்டும் மின் இணைப்பு அப்ளிகேஷன் கொடுத்தாங்க. அதுக்கும் தரை வாடகை வருசத்துக்கு 75 ஆயிரம் கட்டணுமாம். மின்சார இணைப்புக்கு 6 ஆயிரம் ரூபா கட்டணுமாம். ஏன்னு கேட்டால், ‘மத்திய அரசுக்கு சொந்தமான இடம்’னு சொல்லி அலைக்கழிக்கிறாங்க. இங்க உற்பத்தியாகும் மின்சாரம் பக்கத்து மாநிலத்துக்கெல்லாம் போகுதாம். ஆனா, இதோ இங்க இருக்குற எங்க கிராமத்துக்கு வராதா சார்?’’ என்று தங்கள் ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தார் மீனா.
நாம் விசாரிப்பதைப் பார்த்து நம்மைத் தேடி வந்த கடைக்காரர் தனபால், ‘‘என்.எல்.சி. நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறவர்கள் தங்கியுள்ள இடத்துக்கே மின் இணைப்பு வழங்க மறுக்கிறார்கள். இங்கே ஒரு கடை வைப்பதற்கு கூட லைசன்ஸ் வாங்க வேண்டிய நிலைமை. மாத வாடகை 600 ரூபாய் வாங்குகிறார்கள். காலை 6 மணிக்கு கடை திறந்தால் மாலை 6 மணி வரைதான் வியாபாரம் செய்ய முடிகிறது. இருட்டிய பிறகு வியாபாரம் செய்தாலும் எவ்வளவு பணம் கொடுக்கிறார்கள் என்று கூட தெரியவில்லை. இந்த சமயத்தில் கிழிந்த நோட்டையெல்லாம் கொடுக்கிறார்கள். இரவு நேரத்தில் வியாபாரம் செய்ய-முடியவில்லை, இப்படி இருந்தால் எங்கள் வாழ்க்கையை எப்படி நடத்துவது?’’ என்ற ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார்.
இந்த பிரச்னை குறித்து நமக்கு தகவல் தந்த இந்து மக்கள் கட்சி கடலூர் மாவட்ட தலைவர் வெ.பழனிமுருகனிடம் பேசினோம்,
பல முறை மாவட்ட ஆட்சியர் அலு-வலகத்-துக்கு சென்று எங்கள் குடும்ப அட்டைகளை திரும்ப ஒப்படைக்க முயன்றோம். நாங்கள் போராடும்போதெல்லாம் அவர், ‘இது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு என்.எல்.சி. நிறுவனத்துக்கு பரிந்துரை செய்கிறேன்’ என்றுதான் கூறிவருகிறாரே தவிர, இதுவரைக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்பகுதி மக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு தீர்வுகாண வேண்டும். இல்லையேல்... அனைத்து மக்களையும் திரட்டி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தவும் தயங்க மாட்டோம்’’ என்றார் கோபமாக.
இந்த விவகாரம் குறித்து என்.எல்.சி. தலைவர் அன்சாரியிடம் பேசினோம். ‘‘ இதுபற்றி நகர முதன்மை மேலாளாரிடம் கேளுங்கள்’’ என்றார்.
இதையடுத்து பழுப்பு நிலக்கரி நகர முதன்மை மேலாளர் செந்தமிழ்ச்செல்வனை பலமுறைத் தொடர்பு கொண்டும், ‘நான் ரொம்ப பிசி. அப்பாயின்ட்மென்ட் வாங்கிக் கொண்டு அப்புறமா வாருங்கள்’ என சொல்லிவிட்டார். இந்த விவகாரம் பற்றி கடலூர் கலெக்டர் சீத்தாராமனைத் தொடர்பு கொள்ள முயன்றோம். செம்மொழி மாநாடு, திங்கள் குறை தீர்ப்பு கூட்டம் என பிசியாக இருப்பதாக சொன்னார்கள்.
இதே நேரம் என்.எல்.சி. அதிகாரிகள் சிலரிடம் பேசினோம். ‘‘என்.எல்.சி. மத்திய அரசுக்கு சொந்தமான இடம் என்பதால் சில கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டியிருக்கிறது. என்.எல்.சி.யில் பணிபுரியும் நிறையபேர் 21, 30 பிளாக்கில்தான் வசிக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கு மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து கொடுக்க நாங்கள் முன் வந்தாலும் அதை முழுமையாக அவர்களுக்கு பயன்படுத்தத் தெரியவில்லை. மின்கம்பத்தில் லைன் போட்டு மின்சாரத்தைத் திருடி பயன்படுத்துகிறார்கள். அதனால் பக்கத்து ட்ரான்ஸ்பாமர் அடிக்கடி வெடிக்கிறது. அதனால்தான் அந்தப் பகுதிக்கு சரிவர மின் வசதி செய்து தரமுடியவில்லை’’ என்கிறார்கள்.
ஒருசிலர் செய்யும் தவறுகளுக்காக ஒட்டு-மொத்தமாக அனைவரையும் இருட்டில் தள்ளுவதை நியாயப்படுத்த முடியாது. சுற்றிலும் வெளிச்சம் தரும் விளக்கின் அடியில் இருள் கவ்வியிருப்பதைப் போல ஊருக்கே மின்சாரம் தரும் நெய்வேலியில் மின்சாரம் இல்லை என்றால்... இது வெளிச்சம் தரும் விவகாரம் மட்டுமல்ல, என்.எல்.சி.க்கு வெட்கம் தரும் விவகாரமும் கூட!
Source: http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=1462&rid=74
0 கருத்துகள்:
கருத்துரையிடுக