கடலூர் :
கிராம சுகாதார செவிலியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என கடலூரில் நடந்த கிராம சுகாதார செவிலியர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழ்நாடு சுகாதார செவிலியர் சங்க 4வது மாநில மாநாடு கடலூர் சுப்ராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் நடந்தது. மாநிலத் தலைவர் அலமேலு தலைமை தாங்கினார். துணைத் தலைவர் செல்வநாயகி அஞ்சலி தீர்மானம் படித்தார். செயலாளர் மலர்க் கொடி வரவேற்றார். மாநில பொதுச் செயலாளர் சகுந்தலா வேலை அறிக்கை படித்தார். பொருளாளர் மலர்விழி சந்திரலேகா நிதிநிலை அறிக்கையினை படித்தார். மாநாட்டில் மாநில பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் பொற்கைபாண்டியன் பங்கேற்று வாழ்த்துரை வழங்கிப் பேசினார். துணை இயக்குனர் மீரா, ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க மாநில பொதுச் செயலாளர் துரைக்கண்ணு உள்ளிட்டோர் பேசினர். மாநாட்டில் கிராம சுகாதார செவிலியர்களுக்கு 1.1.96 முதல் மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். 1.1.96 முதல் 30-12-05 வரையிலும் நிலுவைத் தொகை வழங்க வேண்டும். 1.1.2006ம் ஆண்டு முதல் 4 ஆயிரம் ரூபாய்க்கு இணையான புதிய ஊதிய நிர்ணயம் செய்யப்பட்டு உரிய கிரேடு வழங்க வேண்டும். மக்கள் தொகை அடிப்படையில் 5 ஆயிரம் பேருக்கு ஒரு துணை சுகாதார நிலையம் என்ற அடிப் படையில் 900 துணை சுகாதார நிலையம் அமைத்து, கிராம சுகாதார செவிலியர்களை நியமிக்க வேண்டும். கிராம சுகாதார செவிலியர்களை ஊட்டச்சத்து திட்டத்தில் பதவி உயர்வு வழங்கி பணி நியமனம் செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக