திட்டக்குடி :
திட்டக்குடி அருகே நெடுஞ்சாலையோரம் இயங்கி வரும் நடுநிலைப் பள்ளிக்கு முன் வேகத் தடை இல்லாததால் குழந்தைகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
விருத்தாசலம் - ராமநத்தம் நெடுஞ்சாலையில் திட்டக்குடி அடுத்த இடைச்செருவாய் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இங்கு இடைச்செருவாய், ஆக்கனூர், பாளையம் உள்ளிட்ட கிராமங்களிலிருந்து 150க்கும் மேற் பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். மாணவர்கள் மதிய உணவு மற்றும் பள்ளி இடைவேளைகளில் வெளியில் சென்று வருகின்றனர். இந்நிலையில் நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ள பள்ளிக்கு முன்பாக வேகத்தடை இல்லை. இது குறித்து கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் தினமலரில் செய்தி வெளியானது.
அப்போதைய ஆர்.டி.ஓ., பாலசுப்ரமணியம் உத்தரவின் பேரில், பள்ளி முன் நெடுஞ்சாலையில் இரும்பு போல்டு மூலம் பிணைக்கப்பட்ட ரப்பரால் ஆன வேகத்தடை அமைக்கப்பட்டது. தற்போது வாகனங்கள் அதிகரிப்பாலும், கனரக வாகனங்களால் ரப்பர் வேகத்தடை பெயர்ந்ததால் வாகனங்கள் அதிவேகமாக செல்கின்றன. இதனால் பள்ளியை விட்டு வெளியேறும் மாணவர்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இது குறித்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊராட்சி சார்பில் பலமுறை வலியுறுத்தியும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் அலட்சியம் செய்து வருகின்றனர். விரைவில் வேகத்தடை அமைக்க வேண்டும். இல்லையெனில் பள்ளிக் குழந்தைகள் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் அபாயம் ஏற்படும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக