உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 03, 2010

சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோயில் திருவிழா: 10ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தீ மிதித்தனர்


சிதம்பரம்:
 
             சிதம்பரம் பஸ் நிலையம் எதிரில் உள்ள கீழத்தெரு மாரியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா திங்கள்கிழமை நடைபெற்றது. 
 
            இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்து காணிக்கை செலுத்தினர். சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோயில் ஆடிமாத உற்சவம் ஜூலை 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஜூலை 31-ம் தேதி முத்துப்பல்லக்கு வீதி உலாவும், பஸ் நிலையத்தில் மோட்டார் தொழிலாளர் சங்கத்தினர் உற்சவமும் நடைபெற்றது. ஆகஸ்ட் 1-ம் தேதி தேர்த் திருவிழா நடைபெற்றது. 
 
            2-ம் தேதி திங்கள்கிழமை காலை 5 மணி முதல் அங்கபிரதட்சிணம், அலகுபோடுதல், பால்காவடி, பாடை பிராத்தனைகள் நடைபெற்றது.பின்னர் 9 மணிக்கு தீ மிதிப்பவர்களுக்கு காப்பு கட்டுதலும், அதன் பின்னர் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் சோதனைக்கரகம், அலகுதரிசனம் எடுத்து பிராத்தனைகளை நிறைவேற்றினர். மாலை 6 மணிக்கு கரகம் தீக்குழிக்குள் இறங்கியது. அதன்பின்னர் தீமிதி உற்சவம் தொடங்கியது. இதில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்று தீ மிதித்து வேண்டுதலை செலுத்தினர்.
 
                   தீமிதி திருவிழாவை முன்னிட்டு சிதம்பரம் டிஎஸ்பி மா.மூவேந்தன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. விழா ஏற்பாடுகளை பரம்பரை டிரஸ்டிகள் என்.வீராசாமி, என்.கலியமூர்த்தி, என்.செல்லதுரை ஆகியோர் செய்திருந்தனர்.தீமிதி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் கீழரதவீதியில் தாற்காலிக பஸ் நிலையம் அமைக்கப்பட்டு அங்கிருந்து கடலூர், சீர்காழி, மயிலாடுதுறை, காட்டுமன்னார்கோவில் மார்க்கமாக செல்லும் பஸ்கள் இயக்கப்பட்டன. போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் கண்ணபிரான் தலைமையில் ஊர்க்காவல் படையினர், போலீஸ் நண்பர்கள் குழுவினர் போக்குவரத்து ஏற்பாடுகளை செய்திருந்தனர். 
 
அன்னதானம் மற்றும் நீர்மோர்:  
 
              தீமிதி திருவிழாவில் கடலூர் மாவட்ட அகில பாரத ஐயப்ப சேவா சங்கம் சார்பில் சாத்தப்பாடித் தெரு, வேணுகோபால்பிள்ளை தெரு ஆகிய இரு இடங்களில் நீர் மோர் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை மாவட்டத் தலைவர் ஆடிட்டர் கே.நடராஜபிரபு தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்டச் செயலாளர் சிவராமன், துணைத் தலைவர் வாசுதேவன், கண்ணபிரான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். போல்நாராயணன் தெருவில் புகைப்படை கலைஞர்கள் சங்கம் சார்பில் நீர் மோரும், டி.கோவிந்தராஜன்பிள்ளை நினைவு அறக்கட்டளை சார்பில் அன்னதானமும் வழங்கப்பட்டது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior