உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஆகஸ்ட் 03, 2010

2,600 வி.ஏ.ஓ., பதவிக்கு இதுவரை விண்ணப்பித்தவர்கள் 6 லட்சம் பேர்!



             தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்,  அறிவித்த 2,653 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வுக்கு, இதுவரை 6 லட்சம் பேர் போட்டி, போட்டுக் கொண்டு விண்ணப்பங்களை வாங்கியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்துள்ளனர். கடைசி தேதியான வரும் 20ம் தேதிக்குள் மேலும் ஏழு லட்சம் பேர் விண்ணப்பம் செய்யலாமென எதிர்பார்க்கப்படுகிறது.

                 கடந்த மாதம் 21ம் தேதி, 2,653 வி.ஏ.ஓ., பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்வது குறித்து டி.என்.பி.எஸ்.சி., அறிவிப்பு வெளியிட்டது. அறிவிப்பு வெளியான நாள் முதல், மாநிலம் முழுவதும் அனைத்து தபால் அலுவலகங்கள் மற்றும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், அலுவலகத்தில் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இப்பணியிடத்திற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி 10ம் வகுப்பு என்பதால், ஆயிரக்கணக்கானோர் போட்டி போட்டுக் கொண்டு தினமும் விண்ணப்பிக்கின்றனர். இதுவரை ஆறு லட்சம் விண்ணப்பங்கள் விற்பனையாகிள்ளன. அதில், பெரும்பாலானவர்கள் விண்ணப்பித்து விட்டனர். மீதமுள்ளவர்கள் விரைவில் விண்ணப்பிக்க உள்ளனர்.

                 மொத்தம் 13 லட்சம் விண்ணப்பங்கள் அச்சிடப்பட்டு, மாநிலம் முழுவதும் உள்ள தபால் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டு வினியோகம் செய்யப்படுவதோடு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்,  அலுவலகத்திலும் விறுவிறுப்பாக விற்பனை நடைபெற்று வருகிறது. பல தபால் அலுவலகங்களில், விண்ணப்பங்கள் விரைவாக தீர்ந்து விடுகின்றன. இரண்டு நாள், மூன்று நாள் கழித்து விண்ணப்பங்கள் வருகின்றன. எனவே, வரும் 20ம் தேதிக்குள் மேலும் ஏழு லட்சம் பேர் விண்ணப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகும், விண்ணப்பங்களுக்கு தேவை இருந்தால், கூடுதலாக விண்ணப்பங்களை அச்சிட்டு வழங்கவும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தயாராக உள்ளது. வி.ஏ.ஓ., பணிக்கான போட்டித் தேர்வு தேதி விவரங்களை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், .வெளியிடவில்லை. இந்த ஆண்டு இறுதியில் தேர்வு நடைபெறலாம் என கூறப்படுகிறது.

இது குறித்து, துறை வட்டாரங்கள் கூறும் போது, 

                  "கடைசி தேதி வரை எவ்வளவு விண்ணப்பங்கள் வருகின்றன என்பதை பார்க்க வேண்டும். அதன் பின், விண்ணப்பங்களை பரிசீலனை செய்தல் உள்ளிட்ட பணிகள் உள்ளன. இதையெல்லாம் கவனத்தில் கொண்டு தான், தேர்வு தேதியை நிர்ணயிக்க முடியும். தேர்வு நடைபெறும் தேதி குறித்து, இம்மாத இறுதியில் முடிவு செய்யப்படும்' என்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior