தமிழகம் முழுவதும் கூட்டுறவு மருந்துக் கடைகள் திறக்கப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் கோ.சி. மணி தெரிவித்தார். திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கத்தின் சார்பில் காமதேனு கூட்டுறவு மருந்துக் கடைகள் சென்னையில் ஆறு இடங்களில் திங்கள்கிழமை திறக்கப்பட்டன.
சென்னை பெசன்ட் நகரில் ஒரு கூட்டுறவு மருந்தகத்தை திறந்து வைத்து கோ.சி. மணி கூறியதாவது:
கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் 50 மருந்து கடைகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனையொட்டி, சென்னையில் 6 கூட்டுறவு மருந்தகங்கள் திறக்கப்பட்டிருக்கின்றன. சென்னை ராயப்பேட்டை, தேனாம்பேட்டை, பெசன்ட் நகர், ராயப்பேட்டை, அசோக்நகர், ராஜா அண்ணாமலைபுரம் மற்றும் கீழ்ப்பாக்கம் ஆகிய இடங்களில் இந்த மருந்தகங்கள் திங்கள்கிழமை முதல் செயல்பட தொடங்குகின்றன. இதே போல் காஞ்சிபுரம் கூட்டுறவு சங்கம் சார்பில் தாம்பரம், பம்மல், போரூர், செம்பாக்கம், மடிப்பாக்கம் ஆகிய இடங்களிலும், பூங்காநகர் கூட்டுறவு பண்டக சாலை சார்பில் அண்ணா நகர், திருமங்கலம், பாடி ஆகிய இடங்களிலும் இந்த கூட்டுறவு மருந்தகங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றன.
இந்த கூட்டுறவு மருந்தகங்களில் சித்தா, யுனானி, ஆங்கில மருந்துகள் உள்பட அனைத்து விதமான மருந்துகளும் கிடைக்கும். இந்த மருந்துக் கடைகளில் அனைத்து விதமான மருந்துகளும் தரமாகவும், ஏழை மக்களின் வசதிக்காக குறைவான விலையிலும் கிடைக்கும். மேலும் இதில், தேனாம்பேட்டை மருந்துக் கடை 24 மணி நேரமும் செயல்பட இருக்கிறது. மற்ற கடைகள் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை செயல்படும்.
இந்த மருந்துக் கடைகளுக்கு மக்களிடம் உள்ள வரவேற்பை பொறுத்து, கூட்டுறவு மருந்தகங்கள் தமிழகம் முழுவதும் திறக்கப்படும் என்றார் அவர். கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைச் செயலர் ஸ்வரன் சிங், இந்திய முறை மருத்துவர்களின் கூட்டுறவு மருந்தக (இம்ப்காப்ஸ்) தலைவர் டாக்டர் ஏ.ராமலிங்கம் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக