கடலூர்:
கடலூர் லாரன்ஸ் ரோட்டில் சுரங்கப்பாதை அமைக்கும் பணியில் தொடர்ந்து இழுபறி நிலை நீடித்து வருகிறது.
நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே துறை பரஸ்பரம் குற்றம் சாட்டி வருவதால் பாலம் கட்டுமானப் பணி துவங்கப்படாமல் ஜவ்வாக இழுத்து வருகிறது. கடலூர் நகரில் தலையாய பிரச்னையாக இருப்பது ரயில்வே சுரங்கப் பாதைப் பணி. நகரின் முக் கிய சாலையாக இருப்பது லாரன்ஸ் ரோடு மட்டும் தான். இந்தச் சாலையில் தான் பஸ் நிலையமும், ரயில்வே நிலையமும் அருகருகே உள்ளன. இதனால் மக்கள் கூட்டம் எப்போதும் இருக்கும். தற்போது மயிலாடுதுறை - விழுப்புரம் அகல ரயில் பாதைப் பணி முடிவடைந்த பின்னர் 9 பயணிகள் ரயிலும், சரக்கு ரயிலும் இந்தப் பாதை வழியாக சென்று கொண்டிருக்கின்றன. வரும் காலங்களில் இன்னும் பல ரயில்கள் விடப்படவுள்ளது.
ரயில்கள் வரும் நேரத்தில் கேட் மூடப்படும் போது லாரன்ஸ் ரோடில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்க முடியாததாக உள்ளது. எனவே ரயில்வே மேம்பாலம் கட்டுமானப் பணியின் போதே சுரங்கப் பாதைக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் மேம்பாலத்திற்கு நிதி பற்றாக் குறை ஏற்பட்டபோது இந்தத் தொகையை அதற்காக செலவிடப்பட்டதால் இப்பணி தாமதமாகியது. இருப்பினும் சுரங்கப்பாதைக்கென தற்போது 7.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விட் டது. ஆனால் பணிகள் துவங்கியபாடில்லை. இதற்கு பொது மக்கள் தரப்பில் பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகின்றன. சுரங்கப் பாதை அமைத்து விட்டால் வியாபாரம் பாதிக்கும் என சில வியாபாரிகள் முட்டுக் கட்டை போட்டு வருவதாக கூறப்படுகிறது. இனி வருவது மழைக் காலம், சுரங்கப்பாதைக்காக தோண்டும் போது கடலோரப் பகுதியாக இருப்பதால் தண்ணீர் ஊறும், பொதுத்தேர்தல் என காரணம் காட்டி பாலம் கட்டுமானப் பணியை தள்ளிப் போடுவர்கள் என கருதி நகரின் மீது அக்கறை கொண்ட பல்வேறு நலச் சங்கங்கள் போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளன.
ரயில்வே நிர்வாகம் ரயில் பாதைக்கு கீழே சுரங்கம் தோண்டி அதில் சிமென்ட்டாலான பெட்டி வடிவ கான்கிரீட் சிலாப்பை செருகி சுரங்கப்பாதை பணியை ஏற்படுத்திக் கொடுத்த பின்புதான் பணியை தொடங்க முடியும் என்கின்றனர் நெடுஞ்சாலைத் துறையினர். இதற்கிடையே நகருக்கு வரும் பிரதான குடிநீர் குழாய், மின் கம்பங்கள், தொலைபேசி கேபிள்கள், ஏ.டி.எம்., மைய கேபிள்கள் என அனைத்தையும் அப்புறப்படுத்த வேண்டும். இதை அகற்றுவதற்கான தொகையை நெடுஞ்சாலைத் துறை சம்மந்தப்பட்ட துறைக்கு செலுத்தி விட்டது. இருப்பினும் அதிகாரிகள் ஒருங்கிணைத்து கூட்டு முயற்சியால் தான் இந்தப் பணியை விரைவாக செய்ய முடியும். இதற்கிடையே திருத்தப்பட்ட வரைபட ஒப்புலுக்காக நெடுஞ்சாலைத் துறையினர் காத்திருக்கின்றனர். எப்படி இருந்தாலும் மக்கள் பிரதிநிதிகள் செவி சாய்த்தால்தான் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்பது தான் நிதர்சனம்.
புதிய சர்வீஸ் பாலம்:
பான்பரி மார்க்கெட்டிற்கு சரக்கு லாரிகள் இடையூறின்றி செல்ல புதிய சர்வீஸ் பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.லாரன்ஸ் ரோடிலிருந்து ரயில் பாதை வரை சுரங்கப்பாதை அமைக்கும் போது இரு பக்கங்களிலும் 5.5 மீட்டர் அகலத்திற்கு சர்வீஸ் ரோடு போடப்படும். ஆனால் ரயில் பாதையில் இருந்து பிள்ளையார் கோவில் வரை சாலையின் அகலம் குறைவாக உள்ளதால் இரு புறமும் 1.5 மீட்டர் இடைவெளி மட்டுமே உள்ளன. இந்த இடைவெளியில் நடைபாதை அமைக்க முடியுமே தவிர சர்வீஸ் ரோடு அமைக்க முடியாது.
அப்படியானால் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டால் பான்பரி மார்க்கெட்டிற்கு சரக்கு லாரி எவ்வாறு செல்வது என்கிற குழப்பம் ஏற்பட்டது. இதனால் வியாபாரிகள் தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. அதனைத் தொடர்ந்து கட்டுமானப் பணியில் திருத்தம் செய்யப்பட்டது. பாடலி தியேட்டருக்கும், ரயில்வே நிலைய சாலைக்கும் சர்வீஸ் பாலம் அமைப்பதென திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து தரப்பினருக்கும் பிரச்னையில்லாமல் சுரங்கப்பாதை அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக