சிதம்பரம்:
சிதம்பரம் கீழத்தெரு மாரியம்மன் கோவில் விழாவில் பக்தர்கள் பாடை கட்டி இழுத்தும், வயிற்றில் மாவிளக்கு போட்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பஸ் நிலையம் அருகே கீழத் தெரு மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் தீ மிதி விழாவில், மத பாகுபாடின்றி முஸ்லிம்கள் முதல் தீட்சிதர்கள் வரை தீ மிதித்து வருகின்றனர். இக்கோவிலில் ஆடித் திருவிழா, ஆண்டுதோறும் 10 நாட்கள் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு கடந்த 23ம் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. முக்கிய விழாவான நேற்று தீ மிதி உற்சவம் நடந்தது. அதனையொட்டி காலை 5 மணி முதல் அங்கபிரதட்சணம், அலகு போடுதல், பால் காவடி, பாடை பிரார்த்தனைகள் நடந்தது. அப்போது வயிற்றுக் கோளாறு சம்பந்தமாக வேண்டிக் கொண்டவர் கள், தங்களின் வயிற்றின் மீது மாவிளக்கு தீபம் ஏற்றி அம்மனை வழிபட்டனர்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வேண்டுதலின் பேரில், குணமடைந்தவர்களை நான்கு சக்கரங்களுடன் அமைக்கப்பட்டுள்ள சிறு வண்டியில் படுக்க வைத்து, கோவிலைச் சுற்றி இழுத்து வந்து நேர்த்திக் கடன் செலுத்தினர். இந்த பாடை பிரார்த் தனையில் சுவாமிக்கு வேண்டிக்கொண்ட குழந்தைகள் முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை படுக்க வைத்து இழுத்துச் சென்றனர். நூற்றுக்கணக்கானோர் வேண்டுதலின் பேரில், அலகு குத்தி ஊர்வலமாக வந்தனர். அதனை தொடர்ந்து தீமிதி விழா நடந்தது. விழாவையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப் பட்டது.டி.எஸ்.பி., மூவேந்தன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக