நொச்சிப்பாட்டையில் பயிரிடப்பட்டுள்ள கரும்பு.
பண்ருட்டி:
பண்ருட்டி அருகே பாட்டை ஆக்கிரமிப்பால் விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர். இதனால் விளைபொருள்களை கொண்டு செல்வதற்கு பல கி.மீ. தூராம் சுற்றி செல்ல வேண்டியது.
பண்ருட்டி வட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பெரும்பாலான கிராம மக்கள் விவசாயம் மற்றும் அதனைச் சார்ந்த தொழிலையே நம்பியுள்ளனர். சமீப காலமாக ஆறு, ஏரி, குளம், குட்டை, கால்வாய், மந்தை வெளி முதலியவற்றை அந்தந்த பகுதியில் உள்ள அரசியல்வாதிகள் மற்றும் முக்கியஸ்தர்கள் ஆக்கிரமித்து அவர்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். பண்ருட்டி வட்டம் பனப்பாக்கம் கிராமத்தில் இருந்து பண்ருட்டி நகராட்சி 1-வது வார்டு வி.ஆண்டிக்குப்பம் வரை 30 அடி அகலமுள்ள நொச்சிப்பாட்டை உள்ளது. இந்தப் பாதையால், பனப்பாக்கம், கணிசப்பாக்கம், தொரப்பாடி, வி.ஆண்டிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்களும், 150-ம் மேற்பட்ட விவசாயிகளும் பயனடைந்து வந்தனர்.
வாகனங்கள், விவசாய இயந்திரக் கருவிகள் சென்று வரவும். விளை பொருள்களை வீடு மற்றும் சந்தைக்கு கொண்டு செல்லவும் வசதியாக இருந்த இந்த நொச்சிப்பாதை, கடந்த பல ஆண்டுகளாக பணபலம் மற்றும் அரசியல் செல்வாக்கு உள்ளவர்களின் ஆக்கிரமிப்பில் உள்ளதாகவும், அதில் கரும்பு, சவுக்கு உள்ளிட்ட பயிர்களைச் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.÷இதனால் அருகில் உள்ள மற்ற விவசாயிகள் தங்கள் நிலத்திற்கு விவசாய இயந்திரங்களை கொண்டு சென்று பயன்படுத்த முடியாத நிலையும், மாட்டு வண்டி மற்றும் மோட்டார் வாகனங்கள் செல்ல முடியாததால் விதை, உரம் கொண்டு செல்வதிலும், விளை பொருள்களை வீடு மற்றும் சந்தைக்கு கொண்டு செல்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக நிலத்தில் இருந்து விளை பொருள்களை கூலி ஆட்கள் மூலம் நீண்ட தூரம் தலைச் சுமையாக கொண்டு வருவதால் கால விரையமும், அதிக செலவும் ஏற்படுகிறது. மேலும் விளை பொருள்களை சந்தைக்கோ, விற்பனை கூடத்துக்கோ கொண்டு செல்வதென்றால் போக்குவரத்து நெருக்கடி மிகுந்த சாலை வழியாக பல கிலோ மீட்டர் தூரம் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. மேற்கண்ட நொச்சிப்பாட்டையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றித் தரும்படி மேற்கண்ட பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பண்ருட்டி வட்டாட்சியர், ஜமாபந்தி அலுவலர், ஆட்சியர் ஆகியோரிடம் மனு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. மனு அளித்த உடன் அதிகாரிகள் வந்து ஆக்கிரமிப்பாளர்களிடம் பேசுவதும், கால அவகாசம் அளிப்பதுடன் சரி அதன் பின்னர் கிடப்பில் போட்டுவிடுவதாகவும், இது போல் ஓரிருமுறை நடந்துள்ளதாகவும், ஆக்கிரமிப்பை அகற்ற மாவட்ட ஆட்சியரோ, வட்டாட்சியரோ நடவடிக்கை எடுக்க தயங்குவது ஏன் என்று தெரியவில்லை எனவும் அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கூறுகின்றனர்.
இது குறித்து பண்ருட்டி வட்டாட்சியர் பி.பன்னீர்செல்வம் கூறியது:
இப்பிரச்னை தொடர்பாக சனிக்கிழமை மண்டல துணை வட்டாட்சியர் நாசிக்இக்பால், வருவாய் ஆய்வாளர் பூபாலசந்திரன், நிலஅளவர் முத்துசாமி ஆகியோரை அனுப்பி ஆக்கிரமிப்பாளர்களிடம் பேசியதாகவும். ஆக்கிரமிப்பாளர்கள் பயிர்களை அறுவடை செய்துகொண்டு நொச்சிப்பாட்டையை ஓப்படைத்து விடுவதாக கூறியுள்ளனர் எனவும் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக