கடலூர் பஸ்நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் தனியார் பஸ்கள்.
கடலூர்:
கடலூரில் தனியார் பஸ்கள் பல, அவைகளுக்கு அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களில் செல்லாமல், தடம் மாறிச் செல்வதால் பொதுமக்கள் போக்குவரத்து வசதியின்றி பாதிக்கப்படும் நிலையும் வேறுபல பிரச்னைகளும் ஏற்படுகின்றன.
கடலூர் மாவட்டத்தில் அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 560 பஸ்களும் தனியார் துறையில் 250 பஸ்களும் இயக்கப்படுகின்றன. அனைத்து பஸ்களும் மாவட்ட ஆட்சியர் தலைமையிலான போக்குவரத்து ஆணையம் அனுமதிக்கும் வழித்தடங்களில் மட்டுமே இயக்கப்பட வேண்டும். அரசு பஸ்கள் இந்த விதிமுறைகளை ஒழுங்காகக் கடைப்பிடிக்கின்றன. விழாக் காலங்கள் மற்றும் மக்களுக்குக் கூடுதல் பஸ் வசதி தேவைப்படும் காலங்களில், தடம் மாறிச் செல்ல வேண்டிய நேரங்களில் மாவட்ட ஆட்சியரிடம் சிறப்பு அனுமதி பெற்று, இயக்கப்படுகின்றன.
ஆனால் தனியார் பஸ்கள் அவற்றுக்கு அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் செல்லாமல், பல நேரங்களில் குறுக்குப் பாதைகளில் செல்கின்றன. கடலூரில் இருந்து சிதம்பரத்துக்கு பரங்கிப்பேட்டை வழியாகச் செல்ல, பல தனியார் பஸ்கள் பெர்மிட் வாங்கிக் கொண்டு, நேர்வழியாக (புதுச்சத்திரம் வழி) சென்று வருகின்றன.÷கடலூரில் இருந்து விருத்தாசலம் செல்லும் சில தனியார் பஸ்கள், வெள்ளக்கரை வரை சென்று வரவும், ஒரு முறை திருவந்திபுரம் வரை சென்றுவரவும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் அந்த ஊர்களுக்கு இந்த தனியார் பஸ்கள் செல்வதைத் தவிர்த்து விடுகின்றன.
நகரப் பஸ்கள் சில கடலூர் பஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்டு, புதுப்பாளையம், லோகாம்பாள் கோயில் தெரு, ஜட்ஜ் பங்களா சாலை, ஆட்சியர் அலுவலகச் சாலை வழியாக மஞ்சக்குப்பம் செல்ல வேண்டும். ஆனால் அவை புதுப்பாளையம் வழியாகச் செல்லாமல், நேர்வழியில் மஞ்சக்குப்பம் செல்கின்றன. அதேபோல் மற்றொரு நகரப் பஸ், கடலூர் முதுநகரில் புறப்பட்டு திருப்பாப்புலியூர் காவல்நிலையம், போடிச்செட்டித் தெரு வழியாக மஞ்சக்குப்பம் செல்ல வேண்டும். ஆனால் இந்த பஸ் திருப்பாப்புலியூர் பகுதிக்கே செல்வதில்லை.
கடலூரில் இருந்து புதுவை செல்லும் சில பஸ்கள் பாகூர், மதகடிப்பட்டு, கரிக்கலாம்பாக்கம் வழியாகச் செல்ல அனுமதி பெற்றுள்ளன. ஆனால் அவை பாகூர், கரிக்கலாம்பாக்கம், மதகடிப்பட்டு செல்லாமல், நேர் வழியில் புதுவை செல்கின்றன. புதுவை-கடலூர் இடையே இயக்கப்படும் சில பஸ்கள், ஒருமுறை திருவந்திபுரம் வரை சென்று வர அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் திருவந்திபுரம் செல்வதையே இந்த பஸ்கள் தவிர்த்து விடுகின்றன. கடலூரில் இருந்து விழுப்புரம் செல்லும் சில பஸ்கள் திருவந்திபுரம், வெள்ளகேட், பட்டாம்பாக்கம், சொர்ணாமூர் வழியாகச் செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் இவை திருவந்திபுரம் வழியாகச் செல்வதில்லை.
இப்படி ஏராளமான பஸ்கள் குறிப்பிட்ட வழித்தடங்களில் செல்ல அனுமதி பெற்று, மாற்று வழித்தடத்தில், தடம் மாறி இயக்கப்படுவதால், பொதுமக்கள் போக்குவரத்து வசதியின்றித் தவிக்க நேரிடுகிறது.÷நகரப் பகுதிகளில் குறிப்பிட்ட பகுதிகளுக்கு பஸ் வசதி கிடைக்காத நிலையும், பல கிராமங்களுக்கு குறைந்த தடவை மட்டுமே பஸ்கள் இயக்கப்படும் நிலையும், இந்த தடம் மாறும் தனியார் பஸ்களால் ஏற்படுகின்றன. இதனால் அடிக்கடி ஏனைய பஸ்களுடன் குறிப்பாக அரசு பஸ்களுடன் டைமிங் பிரச்னையும் ஏற்பட்டு, பஸ் தொழிலாளர்களிடையே அடிக்கடி மோதலும் அடிதடியும் நடக்கிறது. நகரப் பகுதிகளிலும், கிராமங்களிலும் பஸ் வசதி குறைந்து, மக்கள் ஷேர் ஆட்டோக்களையும், ஆட்டோக்களையும் நம்ப வேண்டிய நிலையும், அதனால் பாதுகாப்பற்றப் பயணத்தை மேற்கொள்ள வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது.
இது குறித்து அரசு போக்குவரத்துக் கழக அதிகாரி ஒருவர் கூறுகையில்,
"தனியார் பஸ்கள் தடம் மாறி இயக்கப்படுவதால், அரசு பஸ்களுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இது பற்றி அவ்வப்போது மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாரப் போக்குவரத்து அதிகாரியிடம் புகார் செய்கிறோம். எனினும் தனியார் பஸ்கள் வருவாயை மட்டுமே குறிக்கோளாக் கொண்டு விதிமீறல்களில் ஈடுபடுகிறார்கள். முறையான வழித்தடத்தில் தங்கள் தொழிலாளர் சென்றாலும் அவர்களை மிரட்டி, தடம் மாறச் செய்கிறார்கள் பஸ் முதலாளிகள்' என்றார்.
இது பற்றி வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெயக்குமார் கூறியது
தடம் மாறி பஸ்கள் இயக்கப்படுவதாக, வழித்தடத்தைக் குறிப்பிட்டு புகார்கள் எதுவும் வரவில்லை. அத்தகைய புகார்கள் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக