ஆன்லைன் மூலம் ஓட்டுநர் மற்றும் பழகுநர் உரிமங்களுக்கு விண்ணப்பிக்கும் வசதியை தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை தொடங்கி வைத்த போக்குவரத்துத் துறை அமைச்சர கே.என்.நேரு
ஓட்டுநர் மற்றும் பழகுநர் உரிமம் பெற வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் காத்திருக்க வேண்டாம். இணையதளம் மூலம் ஆன்லைன் (www.transport.nic.in) வழியே விண்ணப்பிக்கலாம். இந்தப் புதிய வசதியை போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
போக்குவரத்துத் துறையின் இணையதளத்தைத் திறந்தால் அப்போது சேவை முன்பதிவு என்ற பிரிவு வரும். அதை கிளிக் செய்ய வேண்டும். அந்தப் படிவத்தில் விண்ணப்பதாரர் பெயர், தந்தை பெயர், முகவரி, பிறந்த தேதி, அங்க அடையாளம், ரத்த வகை ஆகியன கேட்கப்பட்டு இருக்கும். அவற்றை விண்ணப்பத்தில் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்தவுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு ஒப்புகைச் சீட்டு வந்து விடும். அதிலுள்ள எண்ணைக் குறித்துக் கொண்டு மறுநாளே சம்பந்தப்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு நேரில் சென்று கட்டணத்தைச் செலுத்த வேண்டும். கம்ப்யூட்டர் மூலம் நடத்தப்படும் தேர்வில் வெற்றி பெற்றால் உடனடியாக உரிமங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிப்பது போல...
பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்துக்குச் செல்லும் நாள் மற்றும் நேரத்தை இணையதளம் மூலம் நாமே தீர்மானித்துக் கொள்ளலாம். அதுபோன்று, விண்ணப்பதாரர் வட்டார போக்குவரத்து அலுவலகம் செல்லும் தேதியையும், நேரத்தையும் அவரே தீர்மானிக்கலாம். இதனால், விண்ணப்பதாரர்கள் காத்திருக்க வேண்டிய நேர விரயம் தவிர்க்கப்படும்.
புதிய ஏற்பாட்டை அறிமுகம் செய்த பின் போக்குவரத்துத் துறை அமைச்சர் கே.என்.நேரு அளித்த பேட்டி:
சென்னை நகரில் மினி பஸ்கள் விடப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. அதன்படி, மூன்று மாதத்துக்குள் நகரில் 100 பஸ்கள் விடப்படும். போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மினி பஸ்களை மக்கள் அதிகம் பயன்படுத்தும் போது அவர்களுக்கான சொந்த வாகனங்களின் பயன்பாடு குறைய வாய்ப்பு ஏற்படும். இதன்மூலம், போக்குவரத்து நெரிசல் குறையும்.
30 லட்சம் பேர் பஸ்களை பயன்படுத்தி வந்தனர். திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு 40 லட்சம் பேர் பஸ்களை பயன்படுத்தி வருகின்றனர்.15 ஆயிரம் செலுத்தி தேசிய அளவிலான பெர்மிட்டை பெற்றுக் கொள்ளும் திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதை நடைமுறைக்குக் கொண்டு வந்த முதல் மாநிலம் என்ற பெருமையை தமிழகம் பெற்றுள்ளது என்றார் அமைச்சர் கே.என்.நேரு.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக