உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, செப்டம்பர் 19, 2010

தொடர் மழை எதிரொலி: கடலூர் மாவட்டத்தில் நெல்விலை வீழ்ச்சி


 
கடலூர்:

                 கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக நெல் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

                  கடலூர் மாவட்டத்தில் டெல்டா பாசனப் பகுதிகளில் 20 ஆயிரம் ஏக்கரிலும் மற்ற பகுதிகளில் 45 ஆயிரம் ஏக்கரிலும் குறுவை நெல் சாகுபடி செய்யப்பட்டு இருந்தது. தற்போது 90 சதவீதம் அறுவடை முடிந்து விட்டது. விவசாயிகள் சம்பா நெல் சாகுபடிக்குத் தயாராகிக் கொண்டு இருக்கிறார்கள். தற்போது அறுவடை செய்யப்பட்டு வரும் ஏடிடி 43, டீலக்ஸ், ஏடிடி 36, ஏஎஸ்பி 16, ஏஎஸ்பி 16, கோ 43, ஜேஎல் உள்ளிட்ட குறுவை ரகங்களும், பொன்னி, பிபிடி போன்ற இருப்பு வைக்கப்பட்டு இருந்த சம்பாநெல் ரகங்களும் விற்பனைக்கு வந்து கொண்டு இருக்கின்றன.

                 இவை பெரும்பாலும் நேரடியாகத் தனியார் வியாபாரிகளிடமும், மாவட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கும் விற்னைக்கு வந்து கொண்டு இருக்கின்றன. புதன்கிழமை விருத்தாசலம் ஒழுங்குமுறை முறை விற்பனைக் கூடத்துக்கு 6 ஆயிரம் மூட்டைகளும் பண்ருட்டி, கடலூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களுக்கு தலா 500 மூட்டைகள் விற்பனைக்கு வந்தன.÷நெல் விலை குவிண்டால் விருத்தாசலத்தில் குறைந்தபட்சம் ரூ. 780 ஆகவும், அதிகபட்சம் ரூ. 1,080 ஆகவும் இருந்தது. பண்ருட்டியில் குறைந்த பட்சம் ரூ. 790 ஆகவும், அதிகபட்சம்  ரூ. 1,113 ஆகவும் இருந்தது. கடலூரில் குறைந்தபட்ச விலை ரூ. 615 ஆகவும் அதிகபட்ச விலை ரூ. 910 ஆகவும் இருந்ததாக மார்க்கெட் கமிட்டி தெரிவிக்கிறது.

                 அரசு கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் விலை குவிண்டால் சன்ன ரகம் ரூ. 1,100 ஆகவும், சாதாரண ரகம் ரூ. 1,050 ஆகவும் உள்ளது. எனினும் அரசு கொள்முதல் நிலையங்களுக்கு நெல்வரத்து குறைவாகவே இருப்பதாக கொள்முதல் நிலையங்கள் தெரிவிக்கின்றன. காரணம் தற்போது கடலூர் மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை. பல இடங்களில் வயல்களில் தண்ணீர் தேங்கி, இயந்திரம் மூலம் அறுவடை செய்ய முடியாத நிலை இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கிறார்கள். மேலும் அறுவடை செய்தாலும் நெல்லை உலர்த்த முடியவில்லை. அரசு கொள்முதல் நிலையங்களில் 17 சதவீதம் வரை மட்டுமே ஈரப்பதம் அனுமதிக்கப்படும். மேலும் களத்தில் என்னதான் நெல் தூற்றப்பட்டு இருந்தாலும், அரசு கொள்முதல் நிலையங்களில் மீண்டும் தூற்ற வேண்டும் என்று கொள்முதல் நிலைய அலுவலர்கள் வற்புறுத்துகிறார்கள்.

                இத்தகைய காரணங்களால் விவசாயிகள் அரசு கொள்முதல் நிலையங்களுக்கு செல்லாமல், நேரடியாகத் தனியார் வியாபாரிகளையும், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களையும் நாடுகிறார்கள். சம்பா அறுவடையின் போது, களத்துக்கு நேரடியாகச் சென்று கொள்முதல் செய்யும் முறை, நுகர்பொருள் வாணிபக் கழகத்தால் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் குறுவை அறுவடையில் அவ்வாறு இல்லை. இதனால் குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுவதாகவும் விவசாயிகள் தெரிவிக்கிறார்கள்.

இதுகுறித்து கடலூர் மாவட்ட உழவர் மன்றங்களின் கூட்டமைப்பின் தலைவர் பி.ரவீந்திரன் கூறுகையில், 

                   "கடந்த ஆண்டு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 20 சதவீதம் வரை ஈரப்பதம் அனுமதிக்கப்பட்டது. ஆனால் தற்போது 17 சதவீதம் வரை மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. மழைக் காலங்களில் சிறப்பு ஏற்பாடாக, ஈரப்பதம் 20 சதவீதம் வரை அனுமதிக்க வேண்டும். கிராமங்களில் வாய்ப்பு இருக்கும் இடங்களில் அரசு உலர்களங்களை அமைத்துக் கொடுக்க வேண்டும். சம்பா அறுவடையில் செயல்படுத்தியது போல், குறுவை அறுவடையிலும் களத்துக்கு வந்து நெல் கொள்முதல் செய்யும் முறை வேண்டும்.  அரசு நெல் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும்'' என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior