உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, செப்டம்பர் 19, 2010

கொசு உற்பத்தி கேந்திரமாகிய நகராட்சி வணிக வளாகம் !

கடலூர்:

                  கடலூர்  திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையத்தில் பிரமாண்டமாக இருந்த வணிக வளாகம் இடிக்கப்பட்டதால், அந்த இடம் தற்போது நகர மக்களுக்கு கொசுக்களை உற்பத்தி செய்து விநியோகிக்கும் நிலையமாக மாறி இருக்கிறது.

                  திருப்பாதிரிப்புலியூர் பஸ் நிலையத்தில் 35-க்கும் மேற்பட்ட கடைகளைக் கொண்ட வணிக வளாகம், சிதிலம் அடைந்ததால், 3 ஆண்டுகளுக்கு முன் இடித்துத் தரைமட்டம் ஆக்கப்பட்டது.அதில் வணிகம் செய்தவர்கள் சிலருக்கு பஸ் நிலையத்தின் அருகே தாற்காலிக இடம், நீதிமன்றத்தின் உத்தரவுப்படி வழங்கப்பட்டது.இதில் எழுந்த நீதிமன்ற வழக்குகள் காரணமாக, வணிக வளாகத்தை மீண்டும் கட்டுவது இப்போதைக்குச் சாத்தியமில்லை என்ற நிலை ஏற்பட்டு விட்டது. 

                   இதனால் அதில் வணிகம் செய்த வியாபாரிகள்தான் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்ற நிலை மாறி, தற்போது வணிக வளாகம் இருந்த இடத்தால், கடலூர் மக்களே பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். பஸ் நிலையத்துக்கு வரும் பயணிகளின் சுகாதாரம் கேள்விக் குறியாக மாறியிருக்கிறது.  வணிகவளாகம் இருந்த இடம் சாக்கடை கலக்கவும், குட்டையாகவும், பஸ் நிலையத்தில் வணிகம் செய்வோர் குப்பைக் கொட்டும் இடமாகவும் மாறி இருப்பது, கடலூர் மக்களை பெரிதும் சங்கடத்தில் ஆழ்த்தி இருக்கிறது. தொடர்ந்து மழை பெய்து கொண்டு இருப்பதால், அந்த இடம் வற்றாத குளமாக மாறிவிட்டது. 

                     வணிக வளாகம் இருந்த இடத்தில் சாலையோர, நடைபாதைக் கடைக்காரர்களால் ஆக்கிரமித்து கூறுகட்டி பழங்கள் வியாபாரம், அழகுசாதனப் பொருள்கள், துணிகள் விற்கும் இடமாக மாற்றப்பட்டு விட்டது.அவர்கள் வெளியேற்றும் கழிவுப் பொருள்கள் அனைத்தும் இந்தக் குட்டையில்தான் சங்கமமாகின்றன. பழைய வணிக வளாகம் இருந்த இடத்தை, ஆக்கிரமித்துக் கொண்ட நடைபாதைக் கடைக்காரர்களை, போலீசார்  எத்தனை தரம் முயன்றாலும், அவர்களின் அரசியல், தொழிற்சங்கப் பின்னணி காரணமாக அகற்ற முடியவில்லை.இனி இங்கு வணிக வளாகம் கட்ட நடைபாதைக் கடைக்கார்களே அனுமதிக்க மாட்டார்கள் என்ற நிலையும் உருவாகி உள்ளது.

                             கடலூரில் போக்குவரத்துக்கு இடையூறாக, சுகாதாரக் கேடாகத் திகழும், நடைபாதைக் கடைகளை ஒழிக்க, தற்போது இருக்கிற அதிகாரிகளால் எதுவும் செய்ய முடியாது. இனிமேலும் வரும் அதிகாரிகளாலும் அது இயலாத காரியம் என்கிறார்கள் பொதுமக்கள். எனினும் வணிக வளாகம் இருந்த இடம், சாக்கடை தேங்கும் குட்டையாக மாறி இருப்பது, நகர மக்களை பெரிதும் கவலையில் ஆழ்த்தி உள்ளது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior