உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




ஞாயிறு, செப்டம்பர் 19, 2010

தீயணைப்புத் துறையினருக்கு காவல்துறை ஊதியம்: டி.ஜி.பி. ஆர்.நடராஜ் தகவல்


சிதம்பரத்தில் ரூ.1கோடியே 55 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புபணித்துறை அலுவலர் மற்றும் காவலர் குடியிருப்பு திறப்பு விழாவில் டி.ஜி.பி. ஆர்.நடராஜ்
 
சிதம்பரம்:

                தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அலுவலர்கள் மற்றும் காவலர்களுக்கு காவல்துறையினருக்கு இணையான ஊதியம் வழங்கப்படும் என தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புபணித்துறை இயக்குநர் ஆர்.நடராஜ் தெரிவித்தார். சிதம்பரம் ரயில்வே பீடர் ரோட்டில் ரூ. 1 கோடியே 55 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்புத்துறை அலுவலர் மற்றும் காவலர்களுக்கான 25 வீடுகள் கொண்ட குடியிருப்பு திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. 

விழாவில் டி.ஜி.பி. ஆர்.நடராஜ் பங்கேற்று குடியிருப்பை திறந்து வைத்துப் பேசியது:

                 தீயணைப்புத் துறையினருக்கு இதுவரை 700 வீடுகள் உள்ளன. தற்போது ரூ. 9 கோடியே 82 லட்சம் செலவில் 200 வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன. இதுவரை 140 வீடுகள் கட்டிமுடிக்கப்பட்டுள்ளன. 60 வீடுகள் கட்டிமுடிக்கும் தருவாயில் உள்ளது. தமிழக தீயணைப்புத் துறையில் மொத்தம் 6,500 களப்பணியாளர்கள் உள்ளனர். ஆனால் தற்போது அவர்களுக்கு 1127 வீடுகள்தான் உள்ளன. தீயணைப்புத் துறையினருக்கு 16.8 சதவீத அளவில்தான் வீடுகள் உள்ளன. ஆனால் காவல்துறையில் 40 சதவீத வீடுகள் கட்டப்பட்டுள்ளன. நடப்பு ஆண்டில் ரூ. 10 கோடி செலவில் மேலும் 225 வீடுகள் பல்வேறு பகுதிகளில் கட்டுவதற்கு அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

                    கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி, நெல்லிக்குப்பம் ஆகிய இடங்களில் புதிய குடியிருப்புகள் கட்டப்படும். தீயணைப்புத் துறையின் 121 பழைய வாகனங்கள் மாற்றப்பட்டு கடந்த ஆண்டு 60 புதிய வாகனங்களும், இந்த ஆண்டு 61 புதிய வாகனங்களும் வாங்கப்பட்டுள்ளன.  தீயணைப்புத்துறை உயர்மாடி கட்டடங்களில் ஏற்படும் தீயை அணைக்க 32 மீட்டர் ஏணி பொருத்திய 5 வாகனங்கள் உள்ளன. தற்போது ரூ. 10 கோடி செலவில் 54 மீட்டர் ஏணிப்படி கொண்ட புதிய தீயணைப்பு வாகனம் இரண்டு வாங்கப்படவுள்ளது. இந்த ஆண்டு 625 பணியாளர்கள் தேர்வாணையம் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

                        தீயணைப்புத்துறைக்கு தமிழக அரசு பல்வேறு வசதிகளை செய்து தருகிறது. இந்த ஆண்டு ரூ. 14 கோடி செலவில் புதிய சாதனங்கள் வாங்க அனுமதி அளித்துள்ளது. மேலும் காவல்துறையினருக்கு இணையான ஊதியம் தீயணைப்புத்துறை காவலர்களுக்கு வழங்கப்படும். 25 வருடங்கள் அப்பழுக்கற்று பணியாற்றிய காவலர்களுக்கு நிலைய அலுவலராக பதவி உயர்வு வழங்கப்படும். பணியின் தன்மை, போதிய அனுபவம் மூலம் தீயணைப்புத்துறை அலுவலர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படும் என்றார்.

                      விழாவில் மத்திய மண்டல துணை இயக்குநர் வி.ராமச்சந்திரன் வரவேற்றார். சிதம்பரம் தீயணைப்பு நிலைய அலுவலர் தே.வீரபாகு நன்றி கூறினார். விழாவில் அண்ணாமலைப் பல்கலை. பேராசிரியர் அறிவுக்கரசு, கடலூர் கோட்ட அலுவலர் பெ.காங்கேயம்பூபதி, உதவி கோட்ட அலுவலர் சரவணன், கோட்ட அலுவலர்கள் குமாரசாமி (புதுக்கோட்டை), சுப்பிரமணியன் (தஞ்சாவூர்) உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

தமிழகத்தில் 7 புதிய தீயணைப்பு நிலையங்கள் 

                தமிழகத்தில் புதிதாக 7 தீயணைப்பு நிலையங்கள் திறக்கப்படும் என்று டி.ஜி.பி. ஆர்.நடராஜ் தெரிவித்தார்.

சிதம்பரத்தில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கான குடியிருப்பு திறப்பு விழாவில் பங்கேற்ற டி.ஜி.பி. ஆர்.நடராஜ்  கூறியது.

                    தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர், சேலம் மாவட்டம் கெங்கவள்ளி, கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை, சென்னை தியாகராஜர் நகர், திருப்பூர், கடலூர் மாவட்டம் முத்தாண்டிக்குப்பம், ஈரோடு மாவட்டம் மடக்குறிச்சி ஆகிய 7 இடங்களில் புதிய தீயணைப்பு நிலையங்கள் தொடங்கப்படவுள்ளன. கோத்தகிரியில் மீட்புபணி நிலையம் தொடங்கப்படவுள்ளது. தமிழகத்தில் தீயணைப்பு மற்றும் மீட்புபணி நிலையங்கள் 292 உள்ளன. தற்போது புதிய நிலையங்களை சேர்த்து இதன் எண்ணிக்கை 300 ஆக உயரவுள்ளது.

                 வெள்ளக்காலங்களில் பொதுமக்களை மீட்க இதுவரை 150 படகுகள் வாங்கப்பட்டுள்ளன. இந்தப் படகுகள் முக்கியமாக கடலூர், நாகப்பட்டினம் பகுதியில் வெள்ளக்காலங்களில் பயன்படுத்தப்படும்.÷தமிழகத்தில் மீட்புபணி ஊர்திகள் 5 உள்ளன. தற்போது ரூ. 8 கோடி செலவில் மேலும் 16 மீட்புபணி ஊர்திகளுக்கான கட்டுமானப்பணி பொள்ளாச்சியில் நடைபெற்று வருகிறது. விரைவில் பணி முடிவுற்று அந்த வாகனங்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும். புதுதில்லி, ஹைதராபாத் நகரங்களில் உள்ளது போல் நச்சுப்பொருள்களை எதிர்கொள்ளும் கருவிகள் பொருத்தப்பட்ட நவீன வாகனம் ரூ. 5 கோடிக்கு வாங்க அரசு அனுமதித்துள்ளது. 

                     மேலும் இந்த ஆண்டு சிறிய நகரங்களில் பயன்படுத்த, ஆயிரம் லிட்டர் நீர் கொள்ளளவு கொண்ட 15 சிறிய தீயணைப்பு வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன. அதில் ஒன்று சிதம்பரம் நிலையத்துக்கு வழங்கப்படும். மேலும் சிறியஅளவில் நீர் கொள்கலன் மற்றும் கருவிகள் கொண்ட 50 தீயணைப்பு மோட்டார் சைக்கிள்கள் வாங்கப்படவுள்ளன. கருவிகள் உள்ளிட்ட ஒரு மோட்டார் சைக்கிளின் மதிப்பு ரூ. 8 லட்சமாகும் என்றார் ஆர்.நடராஜ்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior