கடலூர்:
கடலூர் மாவட்ட வேளாண்துறை மூலம் வழங்கப்படும் ரசாயன உரங்கள் தரமற்றதாக இருப்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்கும் கூட்டம் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தலைமையில் வெள்ளிக்கிழமை நடந்தது.
கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்த புகார்கள்:
திருக்கண்டேஸ்வரம் உழவர் மன்றத் தலைவர் வி.வரதன்:
துல்லியப் பண்ணை விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு தோட்டக் கலைத் துறை மானியத்தில் வழங்கும் உரம் எடை குறைவாகவும் விலை அதிகமாகவும் உள்ளது. உதாரணமாக தோட்டக்கலைத் துறை வழங்கும் மோனோ அமோனியம் பாஸ்பேட் உரம் விலை 2448-75. ஆனால் தனியார் உர விற்பனை நிலையங்களில் விலை 1900. விலை வித்தியாசம் 548-75. மானிய விலையில் கொடுப்பதாகக் கூறிக்கொண்டு விலையை உயர்த்தி வழங்குவதால் விவசாயிகளுக்குச் சேர வேண்டிய பணம் கொள்ளை போகிறது. மேலும் தோட்டக்கலைத் துறை வழங்கும் உரத்தின் தரம் குறைவாக உள்ளது.இயற்கை வேளாண்மை செய்யும் விவசாயிகளுக்கு 2008-09-ம் ஆண்டில் இடு பொருள்கள் வழங்கப்பட்டன. ஆனால் ஹெக்டேருக்கு |10 ஆயிரம் வரை பண உதவியும் செய்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை வழங்கவில்லை. கடலூர் மாவட்டத்தில் இயற்கை வேளாண்மை செய்த ஏராளமான விவசாயிகளுக்கு இந்தத் தொகை வரவேண்டியது இருக்கிறது.
மாவட்ட உழவர் மன்றக் கூட்டமைப்பின் தலைவர் பி.ரவீந்திரன்:
வீராணம் ஏரியில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்ட மறுநாளே நிறுத்தி விட்டனர். தலைப்புப் பகுதியில் நாற்றங்கால்கள் தண்ணீரில் மூழ்குவதாகப் புகார் தெரிவித்ததால் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. வாய்க்கால்கள் முறையாகத் தூர்வாரப்படாததால், தண்ணீர் வழிந்து ஓடாமல் தேங்கியதே, நாற்றங்கால்கள் மூழ்கியதற்கு காரணம். விவசாயிகளுக்கு போதிய நெல் விதைகள் கிடைக்கும் வகையில், விதை நெல் உற்பத்தியாளர்களுக்குப் பயிற்சியும், ஊக்குவிப்பும் அளிக்க வேண்டும். நீர் நிலைகளில் மரங்கள் நடுவதற்கு வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. சுற்றுச்சூழலை பாதிக்கும் கருவேல மரங்களுக்கு பதில், வேறு மரங்களை நட வேண்டும்.பாட்டாம்பாக்கம் விவசாயிகள் சங்கத் தலைவர் வேங்கடபதி: தோட்டக்கலைத் துறை வழங்கும் வேப்பம் பிண்ணாக்கு தரம் குறைந்ததாக உள்ளது.
மாவட்ட விவசாயத் தொழிலாளர் சங்கச் செயலாளர் ரவீந்திரன்:
கிராமப்புற வேலை உறுதித் திட்டத்தில் ஊதியம் வழங்குவதில் காலதாமதம் செய்கிறார்கள். வெள்ளாறு பாசனப் பகுதிகளில் உள்ள டெல்டா நிலங்களுக்கு தண்ணீர் வழங்குவதில் இந்த ஆண்டும் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதனால் வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
மாவட்ட விவசாயிகள் சங்கக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் கார்மாங்குடி வெங்கடேசன்:
கூட்டுறவுத்துறை தொடங்கி இருக்கும் பசுமை ராணுவம் திட்டத்தை மாவட்டத்தின் அனைத்து பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும்.
வெலிங்டன் ஏரிப் பாசன விவசாயிகள் சங்கத் தலைவர் பெண்ணாடம் சோமசுந்தரம்:
கூட்டுறவு சங்கத்தில் கடன்பெறும் விவசாயிகளுக்கு, கடன் தொகையில் ஒரு பகுதியை சர்க்கரை ஆலைகளிடமிருந்து உரமாகப் பெற விவசாயிகள் கட்டாயப்படுத்துகிறார்கள். அந்த உரம் கரும்பு விவசாயத்துக்கு ஏற்றதாக இல்லை. எனவே கடன் தொகை முழுவதையும் பணமாக வழங்க வேண்டும். தனியார் உர விற்பனை நிலையங்களில் வாங்கிக் கொள்ள அனுமதிக்க வேண்டும்.
சேத்தியாத்தோப்பு அணைக்கட்டு விவசாயிகள் சங்கத் தலைவர் விஜயகுமார்:
பாசன வாய்க்கால்கள் ஓரமாக தேக்கு மரங்கள் நடுவதால் பிரச்னை ஏற்படுகிறது. பல நேரங்களில் வாய்க்கால்கள் அடைப்பட்டு விடுகின்றன. அதைச் சரிசெய்ய முயன்றால் வனத் துறையினர் தடுக்கிறார்கள். எனவே பாசன வாய்க்கால் கரைகளில் மரம் நடக்கூடாது.
பதில் அளித்து மாவட்ட ஆட்சியர் பேசியது:
தோட்டக்கலைத் துறை வழங்கும் உரம் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு அதன் தரம் பரிசோதிக்கப்படும். இதுகுறித்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும். வீராணம் ஏரியில் இருந்து பாசனத்துக்கு நீர் திறக்கப்பட்டது நிறுத்தப்பட்டு இருந்தால் அதிகாரிகள் மூலம் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்.கருவேல மரங்களுக்குப் பதில் வேறு மரங்களை நடுவதற்கு வனத்துறை நடவடிக்கை எடுக்கும். கூட்டுறவுக் கடன் பெறும் கரும்பு விவசாயிகளுக்கு ஆலைகள் மூலம் உரம் வழங்குவதைத் தவிர்க்க, சர்க்கரை துறை இயக்குநர்தான் நடவடிக்கை எடுக்க முடியும்.
கரும்பு விவசாயிகளுக்கு நடவுக்காக, சர்க்கரை ஆலைகள் அறிவித்த சலுகைகளை ஆலைகள் வழங்க வேண்டும் என்றார் ஆட்சியர். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் எஸ்.நடராஜன், வேளாண் இணை இயக்குநர் இளங்கோவன், வேளாண் அலுவலர் மணி, விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் கொத்தட்டை ஆறுமுகம், வீரபாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக