கடலூர் :
ரேஷன் கார்டுகள் அச்சடிப்பின் போது பெயர் மற்றும் முகவரியை "எல்காட்' நிறுவனம் தவறுதலாக அச்சடிப்பதால் அதனை திருத்தம் செய்ய தாலுகா அலுவலகங்களுக்கு அலைவது தொடர்கிறது. கடலூர் மாவட்டத்தில் தற்போது போலி ரேஷன் கார்டுகள் நீக்கம் என்ற பெயரில் பல ஆண்டுகளாக நிரந்தர முகவரியில் வசிக்கும் உண்மையான கார்டுகள் அதிகளவில் நீக்கப்பட்டுள்ளன. தற்போது அந்த கார்டுகளுக்கு மேல் முறையீடு செய்ய கால அவகாசம் அளிக்கப்பட்டு அந்தந்த தாலுகா அலுவலகல்களில் மனுக்கள் குவிந்து வருகின்றன. இதற்கிடையே ஒருபுறம் புதிய ரேஷன் கார்டுகளும் வழங்கப்பட்டு வருகிறது.கலெக்டர் அலுவலகத்தில் உள்ள "எல்காட்' மூலம் புதிய கார்டுகள் அச்சடித்து வழங்கும் பணி நடந்து வருகிறது.
பெரும்பாலான கார்டுகளில் பெயர்கள், தெரு பெயர், வயது, பெயர் விடுபடுவது, இனிஷியல் தவறாக அச்சிடுவது, முழு விலாசமே மாறியிருப்பது என அச்சடிப்பில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டுள்ளது. மனுதாரர்கள் மனுவில் தெளிவாக குறிப்பிட்டிருந்தும் தவறுகள் நிகழ்ந்துள்ளது. நீக்கப்பட்ட கார்டை புதுப்பிக்க அலையும் மக்கள் ஒருபுறமும், பிழை இருக்கும் கார்டுகளை திருத்தம் செய்ய வேண்டி ஒருபுறமும் என தாலுகா அலுவலகங்களை நோக்கி தினம் தினம் நூற்றுக்கணக்கானோர் அலைகின்றனர். இனிஷியலை திருத்த வேண்டும் என்றால் கூட மனு எழுதி அதற்கு கோர்ட் ஸ்டாம்பு ஒட்டி அலைந்து கால் கடுக்க நின்று வாங்கிச் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என பொதுமக்கள் புலம்புகின்றனர். புதிய கார்டுகளில் விலாசம் தவறாக அச்சடிக்கப்பட்டு 2 முதல் 3 மாதம் வரை பொருள்கள் வாங்கி கார்டில் உள்ள விலாசத்தில் ஆட்கள் இல்லை என கூறி கேன்சல் ஆன கார்டுகளும் உண்டு.
இதுபற்றி வருவாய் துறை அதிகாரிகள் கூறுகையில் :
"ஏற்கனவே நீக்கம் செய்த குளறுபடியால் தினமும் பொதுமக்களிடம் பதில் சொல்ல முடியாமல் திண்டாடுகிறோம். இதில் திருத்தம் எழுதி பதிவேட்டில் பதிந்து கார்டில் எழுதி கையழுத்து, சீல் என அதற்கே நேரம் சரியாகி போகிறது' என நொந்து போகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக