உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், பிப்ரவரி 17, 2010

ஆழ்கடலில் மீன் பிடிக்க மீனவர்களுக்கு யோசனை

கடலூர்:
 
                    100 மீட்டர் ஆழம் வரையிலான கடலில் மீன் வளம் குறைந்து வருகிறது. எனவே ஆழ்கடலில் மீன் பிடிக்கும் முயற்சிகளில் மீனவர்கள் ஈடுபட வேண்டும் என்று, இந்திய மீன் வள ஆய்வு நிறுவன சென்னை மண்டல இயக்குநர் ஆன்ட்ரோஸ் யோசனை தெரிவித்தார்.
 
                        தமிழ்நாடு கடல் மீன் வளம் பற்றிய ஒரு நாள் கருத்தரங்கு கடலூரில் செவ்வாய்க்கிழமை நடந்தது. 
 
கருத்தரங்கில் கலந்து கொண்டு ஆன்ட்ரோஸ் பேசியது:
 
                     இந்தியாவில் மீன் உற்பத்தி 1950-51-ல் 0.5 மில்லியன் டன்னாக இருந்தது. 2008-09-ல் இது 3 மில்லியன் டன்னாக உயர்ந்துள்ளது. மீன் ஏற்றுமதி மூலம் இந்தியாவுக்கு 1950-51-ல் ரூ. 2.49 கோடி வருவாய் கிடைத்தது.தற்போது அது ரூ. 8607.9 கோடியாக உயர்ந்து இருக்கிறது. இந்திய எல்லைக்கு உள்பட்ட கடல் பகுதியில், 3.92 மில்லியன் டன் மீன்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டு உள்ளது.இதில் 3.01 மில்லியன் டன் மீன்கள் மட்டுமே தற்போது பிடிக்கப்படுகின்றன. மீன் உற்பத்தியில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது.தற்போது 50 முதல் 100 மீட்டர் ஆழம் வரையிலான கடலில் மட்டுமே மீன் பிடிக்கப்படுகிறது. இதனால் இப் பகுதியில் மீன் வளம் குறைந்து வருகிறது.எனவே இது வரை மீன் பிடிக்காத ஆழ்கடல் பகுதியில் மீன் பிடிக்கும் முயற்சியில் மீனவர்கள் ஈடுபட வேண்டும். வெகுதூரத்தில் கிடைக்கும் சுறா மீன்கள் போன்றவற்றைப் பிடிப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.தமிழ்நாட்டில் 1,076 கி.மீ. நீளக் கடற்கரை உள்ளது. தமிழக கடற்பரப்பளவு 41,412 சதுர கிலோ மீட்டர் ஆகும். ஆழ்கடலில் மீன் பிடிக்கும் வகையில் மாற்று மீன் பிடிப்பு முறைகளை மீனவர்கள் கையாள வேண்டும். இதற்கு படகுகளில் சிறிய மாற்றம் செய்தாலே போதும்.மாமல்லபுரம், கோவளம், புதுவை கடல் பகுதிகளில் 150 மீட்டர் ஆழம் உள்ள இடங்களில் மீன்கள் அதிகம் கிடைக்கின்றன. கடலூர், நாகை புதுவை கடல் பகுதிகளில் 240 முதல் 420 மீட்டர் ஆழம் உள்ள இடங்களில் கணிசமாக இறால் மீன்கள் இருப்பது, ஆய்வில் கண்டறியப்பட்டு இருக்கிறது. ஓடுகயிறு மீன்பிடிக்கும் முறை, சூறை மட்டு வைத்து மீன்பிடிக்கும் முறை, கணவாய் தூண்டில் முறை ஆகியவற்றைக் கடைப்பிடித்து, ஆழ்கடல் மீன்களைப் பிடித்து கூடுதல் வருவாய் பெறலாம். எரிபொருள் செலவும் மிச்சப்படும் என்றார் ஆன்ட்ரோஸ். தமிழ்நாடு மீனவர் நல வாரிய உறுப்பினர் சத்தியமூர்த்தி, கடலூர் மீன் வளத்துறை உதவி இயக்குநர் இளம்பரிதி, தனி அலுவலர் மணிவண்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior