உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 22, 2010

1700 ஆண்டுகள் பழமை வாய்ந்த சிற்பங்கள் கண்டுபிடிப்பு


பண்ருட்டி:

                   பண்ருட்டி வட்டம் சிறுவத்தூர் கிராமத்தில் சுமார் 1700 ஆண்டுகள் பழமை வாய்ந்த பல்லவர் கால சிவன் கோயிலும், சிற்பங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  பண்ருட்டியில் இருந்து சுமார் 4 கி.மீ தூரத்தில் சிறுவத்தூர் கிராமம் அமைந்துள்ளது. இங்குள்ள தருணேந்துகேசர் உடனுறை நாகநாதஈஸ்வரர் கோயில் திருப்பணி நடைபெற்று வருகிறது. இப்பணியின் போது கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டை இந்து சமய அறநிலைத் துறை நிர்வாக செயல் அலுவலர் சிவஞானம் மற்றும் கிராம மக்கள் முன்னிலையில் கல்வெட்டு ஆய்வாளர்கள் பண்ருட்டி தமிழரசன், புதுப்பேட்டை கோவிந்தன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.  இது குறித்து கல்வெட்டு ஆய்வாளர் பண்ருட்டி தமிழரசன் நிருபர்களிடம் கூறியது:   பண்ருட்டி வட்டத்தில் திருவதிகை ஸ்ரீ வீரட்டானேஸ்வரர் கோயில் மட்டுமே பல்லவர் கால கோயிலாக இருந்தது. தற்போது இதன் அருகிலேயே சிறுவத்தூரில் பல்லவர் கால கோயிலும், சிற்பங்களும் இடம் பெற்றிருப்பது வரலாற்றில் புதிய செய்தி. சுமார் 1700 ஆண்டுகளுக்கு முன்னர் சிறுவத்தூர் ஏதோ ஒரு வகையில் சிறப்பிடத்தை பெற்றிருக்க வேண்டும் என கருதப்படுகிறது.  இக்கோயிலின் தென்புறத்தில் கி.பி. 6-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிவலிங்க ஆவுடையார் மட்டில் பூமியில் புதைந்துள்ளது. 390 செ.மீ சுற்றளவும் 120 செ.மீ அகலமும் கொண்ட இந்த ஆவுடையார் பல்லவர் காலத்தைச் சேர்ந்தது. அதனைச் சேர்ந்த சிவலிங்கமே கோயில் கருவறையில் வைத்து வழிபட்டதாகும். மேலும் விநாயகர், சண்டிகேசுவரர், எட்டுப்பட்டை கொண்ட சிவலிங்கம் ஆகிய அனைத்தும் பல்லவர் காலத்தில் வழிபாட்டில் இருந்ததாகும்.  பின்னர் ஆட்சிக்கு வந்த சோழர்கள் காலத்தில் இக்கோயில் பராமரிக்கப்பட்டுள்ளது. இதற்குச் சான்றாக தென்முகக் கடவுள், பைரவர், சூரியன், உமையவள் சிலைகள் உள்ளன. சோழர்களுக்கு பின் இப்பகுதியை ஆண்ட விஜயநகர-நாயக்கர் காலத்தில் இக்கோயில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.  கி.பி.6-ம் நூற்றாண்டைச் சேர்ந்த விநாயகர்-சண்டிகேசுவரர் சிற்பங்கள் வேறெங்கும் காண்பதற்கரிய கலைப் படைப்பாகும்.   இக்கோயிலின் வெளிப்புறச் சுற்றுச்சுவரில் இருந்த கல்வெட்டுகள் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற திருப்பணியின் போது சிமென்ட் கலவையால் பூசி மறைக்கப்பட்டுவிட்டன. இதனால் இக்கோயிலின் பழைய வரலாறு ஆய்வுக்குறியது என்றார் அவர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior