உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், மார்ச் 22, 2010

குடிநீரின்றி அவதியுறும் கீழிருப்பு பள்ளி மாணவர்கள்


பண்ருட்டி:
 
              பள்ளி வளாகத்தில் குடிநீர் இல்லாததால் கீழிருப்பு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி மாணவர்கள் அவதி அடைந்து வருகின்றனர். பண்ருட்டி வட்டம் கீழிருப்பு ஊராட்சியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. 20.11.1926-ல் ஆரம்பிக்கப்பட்ட இப்பள்ளியில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலும் 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் குடிநீர் வசதி இல்லாததால் மாணவர்கள் அருகில் உள்ள வீடுகளுக்கு சென்று தண்ணீர் குடித்துவிட்டு வருகின்றனர். இதே போல் சத்துணவு சமைக்கவும் தண்ணீர் வெளியில் இருந்து தான் எடுத்து வருகின்றனர். இந்த பள்ளியின் மிக அருகில் (30 அடி தூரத்தில்) 2007-2008-ம் ஆண்டு அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தில் கட்டப்பட்ட 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர் தேக்கத் தொட்டி அமைந்துள்ளது. இந்த தொட்டியில் இருந்து சில நூறு ரூபாய் செலவில் இப்பள்ளிக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்குவதற்கான சாத்தியக் கூறுகள் இருந்தும் குடிநீர் இணைப்பு கொடுக்காமல் இருப்பது ஏன் என்று தெரியவில்லை. பள்ளி வளாகத்தில் மாணவர்களின் குடிநீர் தேவைக்காக கட்டப்பட்ட தொட்டி பராமரிப்பு இல்லாமல் சிதலம் அடைந்துள்ளது. மாணவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வது தொடர்பாக ஊராட்சியோ, ஊராட்சி ஒன்றிய நிர்வாகமோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என பொது மக்கள் கூறினர். எனவே இப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் பள்ளி வளாகத்திலேயே கிடைக்க சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இக்கிராம மக்களின் எதிர்பார்ப்பு.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior