உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 17, 2010

சாலை அகலப்படுத்தும் பணி... மந்தம்! வாகன ஓட்டிகள் கடும் அவதி

பரங்கிப்பேட்டை: 

                  சிதம்பரம் அருகே 2 கோடியே 39 லட்சம் செலவில் துவங்கப்பட்ட பரங்கிப்பேட்டை - பு.முட்லூர் சாலை அகலப்படுத்தும் பணி ஆமை வேகத்தில் நடப்பதால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். மாவட்டத்தில் வளர்ந்துவரும் நகர பகுதிகளில் பரங்கிப்பேட்டையும் ஒன்று. கோர்ட், சப் ஜெயில், பதிவாளர் அலுவலகம், போலீஸ் ஸ்டேஷன் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்கள், அண்ணாமலை பல்கலை கடல் வாழ் உயிரின ஆராய்ச்சி மையம், 10க்கும் மேற் பட்ட பள்ளிகள், அரசு மருத்துவமனை உள்ளன. அதனால் மக்கள் புழக்கம் அதிகமுள்ள பகுதியாக உள்ளது. மேலும் பரங்கிப்பேட்டையொட்டி கடற்கரை மீனவ கிராமங்கள் அதிகம் உள்ளன. அங்கு பிடிக்கப்படும் மீன்கள் வேன்கள் மூலம் பல்வேறு வெளிமாநிலங்களுக்கு எடுத்து செல்லப்படுகிறது.
                  இதனால் பரங்கிப்பேட்டை- சிதம்பரம், பரங்கிப்பேட்டை - கடலூர் சாலையில் வாகனப் போக்குவரத்து அதிக அளவில் உள்ளது. இருப்பினும் அதற்கேற்ற சாலை வசதி இல்லை. குறிப்பாக பரங்கிப்பேட்டை - பு.முட்லூர் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். இந்த சாலையை சீரமைக்க கோரி அனைத்து தரப்பினரும் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

                  அதன்பேரில் கடந்த ஆண்டு நெடுஞ்சாலை துறை சார்பில் சாலை அபிவிருத்தி திட்டத்தில் 2 கோடியே 39 லட்சம் மதிப் பில் பு.முட்லூர்- பரங் கிப்பேட்டை சாலையை இருபுறமும் அகலப்படுத்தி மேம்பாடு செய்யவும், அகரம் ரயிலடி அருகே பழைய பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. கடந்த மே மாதம் 20ம் தேதி துவங்கிய இந்த பணி கடந்த பிப்ரவரி 19ம் தேதிக்குள் முடிக்க வேண் டும்  என ஒப்பந்தம் செய் யப்பட்டது. முதல் கட்டமாக பு.முட்லூரில் இருந்து அகரம் ரயிலடி வரை சாலையின் இருபுறமும் சாலை அகலப்படுத்தி மேம்படுத்தப்பட்டது. அகரம் ரயிலடி அருகே பழைய பாலம் இடித்துவிட்டு புதிய பாலம் கட்டி இணைப்பு சாலை அமைக் கும் பணி நடந்து வருகிறது. ஆனால் அகரம் ரயிலடியில் இருந்து பரங்கிப் பேட்டை வரை பல மாதங்களாக எந்த பணியும் செய்யாமல் நிறுத்தி வைத்திருந்தனர்.
கடந்த இரண்டு மாதமாக அகரம் ரயிலடியில் இருந்து சாலையின் இரண்டு பக்கமும் பள்ளம் தோண்டப்பட் டது. இதனால் இரண்டு பஸ்கள் நேருக்கு நேர் வந்துவிட்டால் ஒதுங்கக் கூட இடம் இல்லாததால் வாகன ஓட்டிகள் அவதியடைந்து வருகின்றனர். மேலும் இந்த இடங்களில் வாகனம் செல்லும்போது ஏற்படும் புழுதியினால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அவதியடைந்து வருகின்றனர். பணி ஒப்பந்த காலம் முடிந்தும் இன்னும் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளின் அலட்சியபோக்கால் ஒரு சில இடங்களில் பணி ஆரம்ப கட்ட நிலையிலேயே இருந்து வருகிறது. இதனால் சாலை அகலப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior