சிதம்பரம் :
காட்டுமன்னார்கோவில் அருகே முட்டம் - மணல்மேடு இடையே கொள்ளிடம் ஆற்றில் 48.88 கோடி ரூபாய் மதிப்பில் உயர்மட்ட பாலம் கட்ட பில்லர் அமைக்கும் பணி துவங்கியது. கடலூர் - நாகை மாவட்டத்தை இணைக்கும் வகையில் கடலூர் மாவட்ட எல்லையான காட்டுமன்னார்கோவில் அருகே முட்டம் - மணல்மேடு இடையே நபார்டு உதவியுடன் 48.85 கோடி ரூபாய் செலவில் பாலம் கட்ட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.பாலம் அமைய உள்ள ஆற்றின் இரு பகுதியிலும் இணைப்பு சாலைக்காக தனியாரிடமிருந்து நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டது. பாலம் கட்டும் இடத்தில் மண் பரிசோதனை செய்யப்பட்டு கடந்த பிப். 27ம் தேதி பூமி பூஜை மற்றும் தளவாட பொருட்கள் கொண்டு செல்ல தற்காலிக சாலைகள் அமைக்கப்பட்டது.
காட்டுமன்னார்கோவிலில் கடந்த மாதம் 6ம் தேதி நடந்த விழாவில் முட்டம் பாலத்திற்கு துணை முதல்வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பாலம் பணி 12 மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டதையடுத்து தற்போது பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. முதல் கட்டமாக ஆற்றின் கரை பகுதியில் பில்லர் அமைப்பதற்காக பைல் போடப்பட்டு வருகிறது.
downlaod this page as pdf