கடலூர்:
ஈரோட்டைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட தியாகி ஈரோட்டுப் பெரியார் எம்.ஏ.ஈஸ்வரன் வாழ்க்கை வரலாற்று நூலான அருட்செல்வர் ஆவது எப்படி என்ற நூல் வெளியீட்டு விழா, கடலூரில் புதன்கிழமை நடந்தது.
இந்த நூலின் ஆசிரியர் செ.நல்லசாமி பேசுகையில்,
எம்.ஏ.ஈஸ்வரன், தந்தை பெரியாருடன் வைக்கம் போராட்டத்தில் கலந்து கொண்டார். பெரியார் கைது செய்யப்பட்டு தமிழக எல்லையில் கொண்டு வந்து விடப்பட்டார். ஆனால் ஈஸ்வரன் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு அங்குள்ள காட்டில் விடப்பட்டார். மயங்கிக் கிடந்த அவரை ஒரு பெண் காப்பாற்றி, அவரது உறவினர்களுக்குத் தகவல் கொடுத்தார். மகாத்மா காந்தி மதுரை வந்தபோது, சுதந்திரம் அடையும் வரை திருமணம் செய்து கொள்வதில்லை என்றும், காலில் செருப்பு அணிவதில்லை என்றும் சபதம் ஏற்றார் ஈஸ்வரன். இறுதி வரை திருமணமே செய்துகொள்ளவில்லை என்றார் நல்லசாமி. ஈஸ்வரனின் வாழ்க்கை வரலாற்று நூலை, அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் கடலூர் மாவட்டத் தலைவர் பட்டாம்பாக்கம் வேங்கடபதி வெளியிட்டார். முதல் பிரதியை கூட்டமைப்பின் மாவட்டச் செயலாளர் கார்மாங்குடி வெங்கடேசன் பெற்றுக் கொண்டார். பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
downlaod this page as pdf