கடலூர்:
புதுவை மாநிலத்தில் பதிவு செய்து விட்டு கடலூர் மாவட்டத்தில் சாலைவரி செலுத்தாமல் இயக்கிய போது பிடிபட்ட வாகனங்களின் உரிமையாளர்களிடம் இருந்து, கடந்த 5 நாள்களில் ரூ. 19 லட்சம் சாலை வரி வசூலிக்கப்பட்டு இருப்பதாக வட்டாரப் போக்குவரத்து அதிகாரி ஜெயக்குமார் தெரிவித்தார். புதுவை மாநிலத்தில் விற்பனை வரி மிகக்குறைவாக இருப்பதால், புதுவை மாநிலத்தையொட்டி உள்ள கடலூர், விழுப்புரம், நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்தோர் இரு சக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங்களை புதுவை மாநிலத்தில் வாங்குகின்றனர்.
சாலைவரியும் அங்கு மிகக்குறைவு என்பதால்,போலி முகவரி அளித்து அங்கேயே வாகனப் பதிவும் செய்து கொள்கின்றனர். அவ்வாறு பதிவு செய்யப்படும் வாகனங்கள் தமிழகத்துக்குள் இயக்கப்படும் போது, சாலை வரி வித்தியாசத் தொகையை தமிழக அரசுக்குத் செலுத்த வேண்டும். இத் தொகையைச் செலுத்தாமல் பலர், வரிஏய்ப்பு செய்வதால் தமிழக அரசுக்கு ஆன்டுதோறும் பல கோடி வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இதில் 4 சக்கர வாகனங்களின் வரி ஏய்ப்பு அதிகமாக உள்ளது. இது குறித்து புகார்கள் எழுந்ததன் விளைவாக புதுவை மாநிலத்தில் பதிவு செய்து, கடலூர் மாவட்டத்தில் சாலை வரி செலுத்தாத இருசக்கர வாகனங்களை, கடந்த சில நாள்களாக போக்குவரத்துத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வித்தியாச வரியை செலுத்துமாறு அறிவுறுத்தி வருகிறார்கள். தொடர்ந்து வரிசெலுத்தாத வாகனங்கள் கைப்பற்றப்பட்டு வருகிறது. கடந்த 5 நாள்களில் மட்டும் சாலைவரி வித்தியாசத் தொகையாக, 634 வாகனங்களுக்கு, ரூ. 19.3 லட்சம் வசூலித்து இருப்பதாக வட்டாரப் போக்குவரத்து அதிகாரி ஜெயக்குமார் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறியது:
புதுச்சேரி மாநிலத்துக்கு வரிசெலுத்திவிட்டு, தமிழகச் சாலைகளைப் பயன்படுத்துவது தவறான செயல். சாலைவரி வித்தியாசத் தொகையை பலரும் தாமாக முன்வந்து, செலுத்தத் தொடங்கி இருக்கிறார்கள். போக்குவரத்து அலுவலகங்களில் இதனால் கூட்ட நெரிசல் அதிகரித்து இருப்பதால், சிறப்புக் கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டு உள்ளன என்றும் தெரிவித்தார். அடுத்தக் கட்டமாக சாலைவரி வித்தியாசத் தொகையை செலுத்தாத 4 சக்கர வாகனங்களைப் பிடிக்க அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். 4 சக்கர வாகனங்களைப் பிடிப்பது அதிகாரிகளுக்கு சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் உயர் அதிகாரிகள், வணிகர்கள் என சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்தில் இருக்கும் பலர் இவ்வாறு தமிழகத்தில் சாலைவரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்து வருகிறார்கள். கடலூர் திருவந்திபுரம் சாலையில் இவ்வாறு தமிழகத்தில் சாலை வரி செலுத்தாத இரு ஆம்னி வேன்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெயக்குமார் வியாழக்கிழமை கைப்பற்றினார். அவற்றில் ஆவணங்கள் முறையாக இல்லை. எனவே காவல் நிலையத்தில் அவைகள் ஒப்படைக்கப்பட்டு உள்ளன. மதுபானங்கள் கடத்தலுக்கு பெரும்பாலும் புதுவை மாநிலப் பதிவு வாகனங்களே பயன்படுத்தப் படுவதாக போலீஸôர் தெரிவித்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக