கடலூர்:
அட்சய திரிதியை அன்று மக்கள் எச்சரிக்கையுடன் தங்க நகைகளை வாங்க வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பு சார்பில் விழிப்புணர்வுப் பிரசாரம் வியாழக்கிழமை மேற்கொள்ளப்பட்டது. கடலூர் பஸ்நிலையம், நகைக் கடைகள் நிறைந்த லாரன்ஸ் சாலை, மஞ்சக்குப்பம் கடைவீதி ஆகிய இடங்களில் இந்தப் பிரசாரம் நடந்தது. அட்சய திரிதியை தினத்தில் தங்கம் வாங்கினால் ஐஸ்வர்யம் பெருகும், எல்லா நலன்களும் கிடைக்கும் என்ற நம்பிக்கை மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, நேர்மையற்ற வணிக நடைமுறைகளைக் கையாளும் வணிகர்கள் சிலர், தரம் குறைந்த தங்கத்தை ஏமாந்தவர்களிடம் விற்பனை செய்துவிடும் நிலையை, மக்களுக்கு எடுத்துக்கூற விழிப்புணர்வுப் பிரசாரம் கடலூரில் நடைபெற்றது.
தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள், இந்த விழிப்புணர்வுப் பிரசாரத்தை மேற்கொண்டனர். விளம்பரங்களை நம்பி ஏமாறாதீர்கள், கூட்ட நெரிசலில் குறையுள்ள நகைகளை வாங்கி விடாதீர்கள். தரத்தைப் பாருங்கள், ஹால்மார்க் தர நிர்ணயத்திலும் தரம் குறைவு உண்டு, கண்டிப்பாக அச்சிட்ட ரசீது வாங்குங்கள், கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை நல்ல நகைகளில் முதலீடு செய்யுங்கள் என்ற கோஷங்களுடன், துண்டுப் பிரசுரங்களை மக்களிடையே விநியோகித்தனர். தமிழ்நாடு நுகர்வோர் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எம்.நிஜாமுதீன் தலைமை தாங்கினார். இதில் நுகர்வோர் அமைப்புகளின் பிரதிநிதிகள், நுகர்வோர் ஆர்வலர்கள் அருள்செல்வம், வடலூர் வேம்பு, நெல்லிக்குப்பம் பாலசுப்பிரமணியன், ராமநாதன், சிவசங்கர், பரசுராமன், அமிர்தலிங்கம், புகழேந்தி, பாபு, பாலா, நடராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக