நெய்வேலி:
என்எல்சி நிர்வாகம் வழங்கும் பல்வேறு சலுகைகளையும் பெற்றுக் கொண்டு, ஊழியர்களின் பிள்ளைகளிடமே அதிக கட்டணங்களை நெய்வேலியில் உள்ள தனியார் பள்ளிகள் வசூலிப்பதாக என்எல்சி ஊழியர்கள் புகார் தெரிவித்தனர்.
இப்பிரச்னையில் நிர்வாகம் தலையிட வேண்டும் என குரல் எழுப்பியுள்ளனர். வரும் கல்வியாண்டு முதல் தமிழக அரசு சமச்சீர் கல்வியை அறிமுகப்படுத்துகிறது. மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்துத் தனியார் பள்ளிகளிலும் ஒரே மாதிரியான கட்டணம் நிர்ணயம் செய்ய நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் குழு ஒன்றை அமைத்து.இதையடுத்து தமிழ்நாடு பள்ளிகள் கட்டண முறைப்படுத்தும் சட்டம் மற்றும் விதிகளை மாநில அரசு இயற்றியது.
இதை எதிர்த்து தனியார் பள்ளிகள் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தன. இம்மனு உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்ததையடுத்து, தனியார் பள்ளிகள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தன. இதுவும் உச்ச நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.இதையடுத்து தமிழ்நாடு பள்ளிகள் கட்டண முறைப்படுத்தும் சட்டத்தின் கீழ் நீதிபதி கோவிந்தராஜன் குழு நிர்ணயித்துள்ள அதிகபட்ச புதிய கட்டண விகிதம் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில் நெய்வேலியில் உள்ள தனியார் பள்ளிகள் எல்கேஜி வகுப்புக்கு மாதம் ரூ.480-ம் யூகேஜி வகுப்புக்கு ரூ.495-ம் கடந்த ஆண்டிலிருந்தே வசூலித்து வருகின்றன. இவை நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான குழு நிர்ணயித்த கட்டணத்தைக் காட்டிலும் கூடுதலாகும். மேலும் பள்ளி செலவினங்களைக் காரணம் காட்டி வரும் கல்வியாண்டு முதல் கட்டணம் உயர்த்தப்படும் என பெற்றோர்களுக்கு தற்போது நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
ஆனால், தனது நிர்வாகத்தின் கீழ் இயங்கும் பள்ளிகள் மட்டுமின்றி தனியார் கல்வி நிறுவனங்களுக்கும் இலவச மின்சாரம், தண்ணீர், ஏக்கருக்கு மாத வாடகையாக ரூ.1, பள்ளியைச் சுற்றிலும் சுகாதாரப் பராமரிப்பு என பல்வேறு சலுகைகளை என்எல்சி நிர்வாகம் அளித்து வருகிறது.என்எல்சி ஊழியர்களின் பிள்ளைகள் இப்பள்ளிகளில் அதிக அளவில் பயில்வதால் நிர்வாகம் இத்தகைய சலுகைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் அரசு நிர்ணயித்துள்ள புதிய கட்டண விகிதங்களை அறிந்த என்எல்சி ஊழியர்கள், நெய்வேலியில் உள்ள தனியார் பள்ளிகள் அரசு நிர்ணயித்து கட்டணத்தைக் காட்டிலும் குறைவாக வசூலிக்க வேண்டும் என போர்க்குரல் எழுப்பியுள்ளனர். பல்வேறு சலுகைகளை பெற்றுவரும் தனியார் பள்ளிகள் என்எல்சி ஊழியர்களிடமே அதிக கட்டணம் வசூலிப்பது ஏற்கக் கூடியது அல்ல. எனவே இதுகுறித்து நிர்வாகத்திடம் முறையிட இருப்பதாக எச்எம்எஸ் தொழிற்சங்கத் தலைவர் சி.சுகுமார் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக