கடலூர்:
அடமானம் செய்து கொடுத்த நிலத்தை, ரேஷன் கார்டில் புகைப்படத்தை மாற்றி, பத்திர மோசடி செய்து விற்பனை செய்ததாக இருவரைப் போலீசார் தேடிவருகிறார்கள். கடலூர் அருகே சோனஞ்சாவடியைச் சேர்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தியின் மகன் அசோக்குமார் (47). வைரங்குப்பத்தைச் சேர்ந்த விஜயரங்கனின் மகன் சதீஷ்குமார் (26), பழநிவேலின் மகன் அசோக்குமார் (49) ஆகியோர் தங்களது 2.4 ஏக்கர் நிலத்தை சோனஞ்சாவடி அசோக்குமாரிடம் ரூ. 40 ஆயிரத்துக்கு 1992-ல் அடமானம் வைத்தனராம்.
அந்த நிலத்தை திருப்பித் தருமாறு கே.அசோக்குமாரிடம் சதீஷ்குமார், பி.அசோக்குமார் ஆகியோர் அண்மையில் கேட்டனராம். அடமானத் தொகை ரூ. 40 ஆயிரம் கொடுத்தால், நிலத்தைத் தந்து விடுவதாகக் கூறினார் சோனஞ்சாவடி அசோக்குமார். ஆனால் அவர்கள் பணத்தைக் கொடுக்காமல் சென்றுவிட்டனராம். இந்நிலையில் சோனஞ்சாவடி அசோக்குமாரின் ரேஷன் கார்டை பிரதி எடுத்து வந்து, அதில் பண்ருட்டியை அடுத்த வடக்கு அப்பியம்பேட்டையைச் சேர்ந்த உக்கிரவேல் (52) என்பவரது புகைப்படத்தை இணைத்தனராம். அந்த ரேஷன் கார்டை பயன்படுத்தி, அவர்தான் சோனஞ்சாவடி அசோக்குமார் என்று கூறி, பிரச்னைக்கு உரிய நிலத்தை தொழிற்சாலை உரிமையாளர் ஒருவருக்கு விற்று விட்டனராம். இந்த விவரம் அண்மையில்தான் சோனஞ்சாவடி அசோக்குமாருக்குத் தெரியவந்தது. இது குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் செய்தார். எஸ்.பி.யின் உத்தரவின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் உதவி ஆய்வாளர்கள் குணசேகரன், மகேஸ்வரி ஆகியோர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இது தொடர்பாக வைரங்குப்பம் அசோக்குமார், சதீஷ்குமார் ஆகியோரைப் போலீஸôர் தேடி வருகிறார்கள்.
பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய
0 கருத்துகள்:
கருத்துரையிடுக