உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், மே 04, 2010

பி.இ - பி.டெக்., விண்ணப்ப விற்பனை துவக்கம்


General India news in detail

                   பி.இ., - பி.டெக்., உள்ளிட்ட பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் விற்பனை நேற்று துவங்கியது. அண்ணா பல்கலைக் கழக கல்லூரிகளில் இந்த ஆண்டு, சிவில், மெக்கானிக்கல் பாடப்பிரிவுகளில் தமிழ் பயிற்று மொழி வகுப்புகள் துவக்கப்படுவதன் மூலம் 1,800 இடங்கள் கூடுதலாக கிடைக்கும்.

                  தமிழகத்தில் அண்ணா பல்கலைக் கழகங்கள் மற்றும் அரசு பொறியியல் கல்லூரிகளில் 100 சதவீத இடங்களும், அரசு உதவிபெறும் பொறியியல் கல்லூரிகளில் 80 சதவீத இடங்கள், சிறுபான்மை தனியார் பொறியியல் கல்லூரிகளில் 50 சதவீத இடங்கள், சிறுபான்மை அல்லாத தனியார் பொறியியல் கல்லூரிகளில் 65 சதவீத இடங்கள் அரசு ஒதுக்கீட்டில் நிரப்பப்படுகின்றன. இதற்கான கவுன்சிலிங், சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் நடக்கவுள்ளது. தமிழகத்தில் தற்போது 454 பொறியியல் கல்லூரிகளில் ஒரு லட்சத்து 71 ஆயிரத்து 250 இடங்கள் உள்ளன. இதில், அண்ணா பல்கலைக் கழகங்களில் 5,920 இடங்கள், அரசு கல்லூரிகளில் 2,825 இடங்கள், அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 1,544 இடங்கள், சிறுபான்மை அல்லாத தனியார் கல்லூரிகளில் 75 ஆயிரத்து 608 இடங்கள், சிறுபான்மை தனியார் கல்லூரிகளில் 22 ஆயிரத்து 128 இடங்கள் என மொத்தம் ஒரு லட்சத்து 8,025 இடங்கள் அரசு ஒதுக்கீட்டில் நிரப்பப்படுகின்றன. பொறியியல் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான விண்ணப்பங்கள் விற்பனை நேற்று துவங்கியது.

விண்ணப்பங்கள் விற்பனையை துவக்கி வைத்த சென்னை அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறியதாவது: 

                        பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள் 58 மையங்களில் வழங்கப்படுகின்றன. விண்ணப்பத்தை பெற நேற்று காலை 4 மணிக்கே சென்னை அண்ணா பல்கலைக் கழகத்திற்கு மாணவர்கள் வரத் துவங்கி விட்டனர். இம்மாணவர்களுக்கு, நேற்று காலை 6 மணி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு அண்ணா பல்கலைக் கழக கல்லூரிகளில், மெக்கானிக்கல் மற்றும் சிவில் பிரிவுகளில் தமிழ் பயிற்று மொழி வகுப்புகள் துவக்கப்படுகின்றன. மெக்கானிக்கல் பிரிவில் 900 இடங்கள், சிவில் பிரிவில் 900 இடங்கள் என மொத்தம் 1,800 இடங்கள் இதன்மூலம் கூடுதலாக கிடைக்கும். தமிழில் பாடப்புத்தகங்கள் இம்மாத இறுதியில் தயாராகிவிடும். ஆசிரியர்களும், மாணவர்களும் புரிந்து கொள்ளும் வகையில் ஒரு சில வார்த்தைகள் ஆங்கிலத்திலும் இடம்பெறும். இந்த ஆண்டு புதிதாக பொறியியல் கல்லூரிகள் துவங்க, 50 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதன்மூலம் 12 ஆயிரம் இடங்கள் கூடுதலாக கிடைக்கலாம். இவ்வாறு மன்னர் ஜவகர் கூறினார்.

                      பொறியியல் படிப்பில் சேர, பிளஸ் 2வில் கணிதம், இயற்பியல், வேதியியல் பாடங்களில் சராசரியாக குறிப்பிட்ட அளவு மதிப்பெண் பெற வேண்டும். பொதுப்பிரிவு மாணவர்கள் பிளஸ் 2வில் 55 சதவீதம், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்கள் 50 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் 45 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். எஸ்.சி., - எஸ்.சி., அருந்ததியினர் மற்றும் எஸ்.டி., பிரிவினர் பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். பொதுப்பிரிவினருக்கு 31 சதவீதம், பிற்படுத்தப்பட்டோருக்கு 26.50 சதவீதம், பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு 3.50 சதவீதம், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதம், எஸ்.சி., பிரிவினருக்கு 15 சதவீதம், எஸ்.சி., அருந்ததியினருக்கு 3 சதவீதம், எஸ்.டி., பிரிவினருக்கு 1 சதவீதம் இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு 150 இடங்கள், சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 10 இடங்கள், விளையாட்டு வீரர்களுக்கு 100 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. உடல் ஊனமுற்றோருக்கு மொத்த இடங்களில் 3 சதவீத இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.

                       பிளஸ் 2வில் தொழிற்கல்வி பயின்ற மாணவர்களுக்கு, அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் 100 இடங்களும், தனியார் கல்லூரிகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களில் 4 சதவீத இடங்களும் ஒதுக்கப்படுகின்றன. இம்மாதம் 29ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படும். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை மே 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். ஜூன் 15ம் தேதி, 'ரேண்டம்' எண் வழங்கப்பட்டு, ஜூன் 18ம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். ஜூன் 28ம் தேதி முதல் ஜூலை 25ம் தேதி வரை பொறியியல் கவுன்சிலிங் நடைபெறும்.

57 ஆயிரம் விண்ணப்பம் விற்பனை

                  பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள் விற்பனை துவங்கிய முதல் நாளில், 57 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் விண்ணப்பங்களை பெற்றனர். பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள் விற்பனை நேற்று துவங்கியது. முதல் நாளான நேற்றே மாணவர்கள் ஆர்வமுடன் வந்து விண்ணப்பங்களை பெற்றுச் சென்றனர். பிளஸ் 2 முடிவு இன்னும் வெளியிடப்படாத நிலையிலேயே விண்ணப்பங்களை பெற மாணவர்கள் ஆர்வம் காட்டினர். தமிழகம் முழுவதும் 58 மையங்களில் பொறியியல் விண்ணப்பங்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், நேற்று மாலை 4 மணி நிலவரப்படி, மொத்தம் 57 ஆயிரத்து 549 விண்ணப்பங்கள் விற்பனையாயின.

மூன்று கல்லூரிகள் 'பொறியியல் கவுன்சிலிங்கில் சேர்க்கப்படவில்லை

                  கடந்த ஆண்டுகளில் பொறியியல் கவுன்சிலிங்கில் இடம்பெற்றிருந்த கல்லூரிகளில், ஜே.ஏ., இன்ஸ்டிடியூட் ஆப் இன்ஜினியரிங் அண்டு டெக்னாலஜி, பி.எம்.ஆர்., இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, ஜி.ஜி.ஆர்., காலேஜ் ஆப் இன்ஜினியரிங் ஆகிய மூன்று தனியார் பொறியியல் கல்லூரிகள் இந்த ஆண்டு பொறியியல் கவுன்சிலிங்கில் சேர்க்கப்படவில்லை. 

இதுகுறித்து துணைவேந்தர் மன்னர் ஜவகர் கூறியதாவது
 
                 'குறிப்பிட்ட மூன்று கல்லூரிகள் இந்த ஆண்டு பொறியியல் கவுன்சிலிங்கில் சேர்க்கப்படவில்லை. இக்கல்லூரிகள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்ததன் அடிப்படையில், சம்பந்தப்பட்ட கல்லூரிகளில் அண்ணா பல்கலைக் கழகம் சார்பில் மறு ஆய்வு நடத்தப்படவுள்ளது. அந்த ஆய்வில் கல்லூரிகள் தகுதி பெற்றால், அக்கல்லூரிகள் கவுன்சிலிங்கில் சேர்க்கப்படலாம்,'' என்றார். இதேபோல, வி.கே.கே.விஜயன் பொறியியல் கல்லூரியிலும், இரண்டு பாடப்பிரிவுகள் மட்டுமே இந்த ஆண்டு பொறியியல் கவுன்சிலிங்கில் சேர்க்கப்பட்டுள்ளன.

பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior