கடலூர்:
திமுக ஆட்சியில் தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் அதிகரித்துவிட்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ சி.மகேந்திரன் தெரிவித்தார்.
சி.ஐ.டி.யூ. ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கங்கள் சார்பில், கடலூர் தேரடித் தெருவில் சனிக்கிழமை இரவு நடந்த மே தின பொதுக்கூட்டத்தில் மகேந்திரன் பேசியது:
திமுக ஆட்சியில் தொழிற்சாலைகளில் 8 மணி நேர வேலை என்ற நிலை மாறி, தொழிலாளர்கள் 10 மணி நேரம் 12 மணி நேரம் வேலை வாங்கப்படுகிறார்கள். அரசு நிறுவனமான டாஸ்மாக் மதுக்கடைகளில் தொழிலாளர்கள் 14 மணி நேரம் வேலை வாங்கப்படுகிறார்கள். தமிழகத்தில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களில் தொழிற்சங்கங்கள் வைத்துக் கொள்ளும் உரிமையே மறுக்கப்பட்டு வருகிறது. 14 மணி நேரம் உழைத்தும் நியாயமான ஊதியம் கிடைக்கவில்லை.ரேஷனில் அரிசி விலை கிலோ ரூ.1. ஆனால், கடைகளில் உப்பு விலை கிலோ ரூ.12. அத்தியாவசியப் பொருள்களின் விலைகள் 17 சதவீதம் உயர்ந்து இருக்கிறது. விலைவாசியைக் குறைக்க மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கட்டுமானப் பொருள்களின் விலை கடுமையாக உயர்ந்துவிட்டன. ஆனால் பெயின்ட் பிரஷ்ஷுக்கு வரிவிலக்கு என்று அரசு அறிவிக்கிறது. இதனால் என்ன பயன்.
உணவுப் பொருள்களின் விலைகள் 100 சதவீதம் உயர்ந்து விட்டன. ஆனால் ஊழியர்களின் ஊதியம் 10 முதல் 15 சதவீதம்தான் உயர்த்தப்பட்டு இருக்கிறது. நாடு முழுவதும் மின்வெட்டால் மக்கள் அவதிப்படுகிறார்கள். ஆனால் சென்னையில் உள்ள பன்னாட்டு நிறுவனங்களுக்கு மட்டும் தடையின்றி மின்சாரம் கிடைக்கிறது. 1700 மெகாவாட் மின்சாரம் இந்தத் தொழிற்சாலைகளுக்கு மட்டும் வழங்கப்படுகிறது என்றார் மகேந்திரன். கூட்டத்துக்கு சி.ஐ.டி.யூ. மாவட்டத் தலைவர் பி.கருப்பையன், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்டத் தலைவர் என்.மாரியப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர். சி.ஐ.டி.யூ. மாநிலக்குழு உறுப்பினர் வி.முத்துவேல், ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட பொதுச் செயலாளர் எம்.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வி.குளோப் வரவேற்றார். கே.உலகநாதன் எம்.எல்.ஏ. (ஏ.ஐ.டி.யூ.சி. மாநிலக்குழு உறுப்பினர்) உள்ளிட்ட பலர் பேசினர். டி.குமார் நன்றி கூறினார்.
பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய
0 கருத்துகள்:
கருத்துரையிடுக