பண்ருட்டி வட்டம் கீழ்மாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பி.ஆர்.மாயவேல் (வலது) தோட்டத்தில் விளைந்த 65 கிலோ எடையுள்ள மெகா சைஸ் பலாப்பழம்.
பண்ருட்டி:
சீசன் தொடங்கியுள்ளதால் பண்ருட்டி சந்தையில் பலாப்பழத்தின் வரத்து அதிகரித்துள்ளது. சராசரி அளவுள்ள ஒரு பழத்தின் விலை ரூ150 முதல் ரூ.200 வரை விற்கப்படுகிறது. பலாப்பழம் என்றவுடன் அனைவரின் நினைவுக்கு வருவது பண்ருட்டி. பண்ருட்டி கெடிலம் ஆற்றுக்கு தென் பகுதியில் வளம் நிறைந்த செம்மண் நிலப்பகுதியில் அடந்து வளர்ந்துள்ள முந்திரி காடுகளுக்கு இடையேயும், வீட்டுத் தோட்டத்திலும் பலா மரம் வளர்க்கப்படுகிறது. இப்பகுதியில் விளையும் பலாப்பழங்கள் மிகுந்த சுவை கொண்டவை. இதனால் தமிழகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பண்ருட்டி பலாப்பழத்தை விரும்பி சாப்பிடுகின்றனர்.
இதுகுறித்து பலா விவசாயிகள் சீரங்குப்பம் ஆர்.மணிவண்ணன், சாத்திப்பட்டு எழில், காடாம்புலியூர் டி.சரவணன் ஆகியோர் கூறியது:
மார்ச் மாதம் முதல் ஜூன் மாதம் வரை பலாப்பழம் சீசன். இக்காலத்தில் பலா மரத்தை பராமரிக்க வேண்டும். அவ்வப்போது காய்கள் பழுத்துள்ளனவா, பூச்சிகள் தாக்கியுள்ளதா, களவு போகாமல் உள்ளதா என பார்க்க வேண்டும். குறைவான எண்ணிக்கையில் பலா மரம் வைத்துள்ளவர்கள் அவர்களே பராமரித்துக்கொள்வர். அதிக அளவில் மரம் வைத்துள்ளவர்கள் குத்தகைக்கு விட்டுவிடுவர்.குத்தகை விடும்போது மரத்தின் தரம், காயின் சுவை மற்றும் அளவு ஆகியவற்றை கணக்கிட்டு பிஞ்சு ஒன்று ரூ.20 முதல் ரூ.30 வரையில் விலை பேசி ஒப்பந்தம் செய்வர்.மரத்தின் அளவு மற்றும் வயதுக்கு தகுந்தாற்போல் 20 முதல் 50 பிஞ்சுகள் வரைவிட்டுவிட்டு, மரத்தில் இருந்து கழிக்கப்படும். ஏனைய பிஞ்சுகளை சில சமயத்தில் விற்றுவிடுவோம். அதிக அளவு பிஞ்சுகளை மரத்தில் விட்டால் மலட்டு தன்மை அடைவதுடன் சில சமயத்தில் மரம் இறந்துவிடும். இன்னும் ஓரிரு வாரத்தில் முழு அளவில் பலாப்பழம் அறுவடை தொடங்கிவிடும் என கூறினர்.பண்ருட்டி - கும்பகோணம் சாலையில் பலா பழம் கமிஷன் மண்டி வைத்துள்ள பி.ஆர்.மாயவேல் கூறியது:விவசாயிகள் மற்றும் குத்தகைதாரர்கள் அறுவடை செய்து கொண்டு வரும் பலாப்பழங்களை விற்று கொடுத்து வருகின்றோம்.
இதற்கு ஊதியமாக குறிப்பிட்ட அளவு கமிஷன் பெற்றுக்கொள்வோம்.பண்ருட்டியில் இருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், மும்பை, பெங்களூர், ஆந்திரம் உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு டன் கணக்கில் அனுப்பி வருகின்றோம்.மும்பையில் பலாப்பழத்தின் ஜூஸ் அதிக அளவு விற்பனை ஆவதல் அங்கு அதிக அளவு பலாப்பழங்கள் அனுப்பப்படுகின்றன. ஒரு டன் பலாப்பழம் ரூ.15 ஆயிரத்துக்கும் மேல் விலை போகிறது. கொல்கத்தா மாநிலத்தில் பலா பிஞ்சுக்கு அதிக கிராக்கி உள்ளதால் ஒரு கிலோ ரூ.25 வரை விலை போகிறது என்றார் அவர்.
பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய
0 கருத்துகள்:
கருத்துரையிடுக