குறிஞ்சிப்பாடி :
டாக்டர்கள் மனசாட்சியுடன் பணியாற்ற வேண்டுமென குறிஞ்சிப்பாடியில் நடந்த வளைகாப்பு மற்றும் மகப்பேறு நிதியுதவி வழங்கும் விழாவில் அமைச்சர் பன்னீர்செல்வம் பேசினார்.
கடலூர் மாவட்டம் பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை, கடலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து நலக்கல்வி, வளைகாப்பு மற்றும் மகப்பேறு நிதியுதவி வழங்கும் விழா குறிஞ்சிப்பாடியில் நடந்தது. குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனை முதன்மை மருத்துவ அலுவலர் சீனுவாசன் வரவேற்றார். கலெக்டர் சீத்தாராமன் தலைமை தாங்கினார். துணை இயக்குநர் மீரா திட்ட விளக்கவுரையாற்றினார்.
அமைச்சர் பன்னீர் செல்வம் கர்ப்பிணி பெண் களுக்கு மகப்பேறு நிதிஉதவி வழங்கி பேசியதாவது:
தி.மு.க., ஆட்சி வந்த பிறகுதான் மருத்துவத் துறை சிறந்து விளங்குகிறது. தமிழகத்தில் 6 ஆயிரத்து 947 டாக்டர்கள், 11 ஆயிரத்து 948 செவிலியர்கள், ஆயிரத்து 288 கிராமபுற செவிலியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் 3,218 பொது ஊழியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் பயனடையும் வகையில் மருத்துவ துறை இயங்குகிறது. முத்துலட்சுமி மகப்பேறு உதவி திட்டம் தமிழகத்தில் மட்டுமே செயல்படுத்தப்படுகிறது. கடந்த 2006ம் ஆண்டு முதல் 20 லட்சத்து 11 ஆயிரத்து 500 கர்ப்பிணி பெண்களுக்கு ஆயிரம் கோடி நிதியுதவி அளிக்கப்பட் டுள்ளது. ஜெயலலிதா ஆட்சி காலத்தில் தமிழகத்தில் நலத்திட்டங்களே செயல்படுத்தப்படவில்லை. 108 ஆம்புலன்ஸ் சேவை மூலம் 1 லட்சத்து 10 ஆயிரம் கர்ப்பிணி பெண்கள் பயனடைந்துள்ளனர். அனைத்து டாக்டர்களும் பணி நேரத்தில் பணியில் இருப்பதுடன் மனசாட்சியுடன் நடந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.
பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய
0 கருத்துகள்:
கருத்துரையிடுக