நெய்வேலி:
நெய்வேலிக்கு அருகில் 10 கி.மீ. சுற்று வட்டாரத்துக்குள் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும், கல்வி, சுகாதாரம் மற்றும் விளையாட்டு வசதிகளை மேம்படுத்த என்எல்சி தயாராக இருப்பதாக நெய்வேலி மாற்றுக் குடியிருப்பில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியின் ஆண்டு விழாவில் என்எல்சி தலைவர் ஏ.ஆர்.அன்சாரி பேசினார். என்எல்சிக்கு நிலம் வழங்கியவர்களுக்கு நெய்வேலி இந்திரா நகர் அருகில் 350 ஏக்கர் பரப்பளவில் மாற்றுக்குடியிருப்பு அமைக்கப்பட்டு, அவர்களுக்கான அனைத்து அடிப்படை வசதிகளையும் என்எல்சி நிறுவனம் செய்துள்ளது.
இங்கு இயங்கி வரும் அரசு நடுநிலைப்பள்ளியில் 400 மாணவ,மாணவியர் பயிலுகின்றனர். இப்பள்ளியில் என்எல்சி சுற்றுப்புற மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.25 லட்சம் செலவில் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் பள்ளிக்கு நிரந்தர கூரை, கூடுதல் வகுப்பறை, பால்வாடி மையம், சத்துணவு மையம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன. புனரமைக்கப்பட்ட பள்ளியை என்எல்சி தலைவர் ஏ.ஆர்.அன்சாரி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். பின்னர் அதைத் தொடர்ந்து பள்ளியில் நடந்த ஆண்டு விழாவில் பங்கேற்ற அவர், தான் சிறுவயதில் 5 கி.மீ. தூரம் நடந்துச் சென்று ஓராசிரியர் தொடக்கப்பள்ளியில் மரத்தடி நிழலில் பயின்று இன்று இந்த நிலைக்கு உயர்ந்துள்ளதாகவும், அதுபோன்ற நிலை இன்றைய மாணவர்களுக்கு ஏற்படக்கூடாது என்ற எண்ணத்தில் என்எல்சி நிறுவனம் இதுபோன்ற அடிப்படை வசதிகளை பள்ளிகளுக்கு செய்துவருகிறது என்றும் கூறினார். நிகழ்ச்சியில், பள்ளியின் தலைமையாசிரியை பத்மாவதி வரவேற்றார். என்எல்சி நில எடுப்புத் துறை பொது மேலாளர் என்.எஸ்.ராமலிங்கம் தலைமை வகித்தார். என்எல்சி நில எடுப்புத் துறை அலுவலர்கள் சிவசங்கரன், கார்த்திகேயன், தனபால், வீரசிகாமணி, டாக்டர் செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பி.டி.எப் கோப்பாக பதிவிறக்கம் செய்ய
0 கருத்துகள்:
கருத்துரையிடுக