உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 09, 2010

400 ஆண்டு பழமை வாய்ந்த கட்டடம் ரூ. 14.50 லட்சத்துக்கு ஏலம்


சிதைந்து கிடக்கும் பழமை வாய்ந்த கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம்.
கடலூர்:
 
               400 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரசுக் கட்டடத்தை உடைத்து அதில் உள்ள பொருள்களை எடுத்துக் கொள்ள, ரூ.14.50 லட்சத்துக்கு செவ்வாய்க்கிழமை ஏலம் விடப்பட்டது.
 
                      கடலூர் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் 400 ஆண்டுகளுக்கு முன்  கட்டப்பட்டது. இப்பொழுதும் இக்கட்டடம் பயன்பாட்டில் உள்ளது. பராமரிக்கப்பட்டு நினைவுச் சின்னமாகவும் காட்சி அளிக்கிறது. இதில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ராபர்ட் கிளைவ் வசித்ததாக சரித்திரக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கும் பிரெஞ்சுக்காரர்களுக்கும் இடையே நடந்த போர்களில் வெற்றி வாகைசூடி, இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி நிறுவப்பட காரணமாக இருந்தவர் ராபர்ட் கிளைவ்.  மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்துக்கு எதிரில் சற்று தொலைவில் அமைந்து இருக்கும் பழமை வாய்ந்த கட்டடத்தில், கடலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இயங்கி வந்தது. இதுவும் 400 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. கிழக்கு இந்திய கம்பெனியினர் இக்கட்டடத்தை அலுவலகமாகப் பயன்படுத்தி வந்ததாகக் கடலூர் மாவட்ட வரலாற்று ஆவண  சரித்திரக் குறிப்புகள் தெரிவிக்கின்றன.  
 
                      இவ்வளவு பழமை வாய்ந்த கட்டடம் தமிழக பொதுப்பணித் துறையினரால் பராமரிக்கப்பட்டு வந்தது. கட்டடத்தின் மொட்டை மாடியில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு இருந்தது. தொட்டி தொடர்ந்து ஒழுகி வந்ததன் காரணமாக அப்பகுதியில் செடி, கொடிகள் முளைத்து, கட்டடம் பழுதானதாகக் கூறப்படுகிறது.  மேலும் ஊரக வளர்ச்சித் துறையின் கீழ் உள்ள, ஊராட்சி ஒன்றிய அலுவலகம் இதில் இயங்கி வந்ததால், பொதுப்பணித் துறையினர் இக்கட்டடத்தை முறையாகப் பராமரிக்க வில்லை என்றும் கூறப்படுகிறது .இதனால் கடந்த ஆண்டு இக்கட்டடத்தின் படிக்கட்டுகள் இருந்த பகுதி, இடிந்து விழுந்து விட்டது. அதைத் தொடர்ந்து இங்கு இயங்கி வந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில் உள்ள பூமாலை வணிக வளாகத்துக்கு மாற்றப்பட்டது. பழமை வாய்ந்த இக்கட்டடத்தை இடித்துவிட பொதுப்பணித்துறை முடிவு செய்தது. சுட்ட செங்கல் மற்றும் சுண்ணாம்பால் கட்டப்பட்டு அழகுடனும் கம்பீரமாகவும் விளங்கிய இக் கட்டடம் 2 ஆயிரம் சதுர அடிக்கும் மேல் பரப்பளவு கொண்டது. இதில், விலை உயர்ந்த தேக்கு மரங்கள் ஏராளமாக உள்ளன. எனவே கட்டடத்தை இடித்து அதில் உள்ள பொருள்களை எடுத்துக்கொள்ள ஏலம் விடப்பட்டது. ரூ.14 லட்சம் அடிப்படை கேள்வித் தொகையாக அறிவிக்கப்பட்டு இருந்தது. ஏலம் கேட்க சுமார் 25 பேர் டெண்டர் படிவங்களை வாங்கிச் சென்று இருந்தனர். இறுதியாக ராமலிங்கம், மாப்பிளை மைதீன் என்ற இருவர் மட்டும் டெண்டர் படிவத்தை அளித்து இருந்ததாகக் கூறப்படுகிறது. இவர்களில் அதிகத் தொகையாக ரூ.14.50 லட்சத்துக்கு ஏலம் கேட்டு இருந்த மாப்பிளை மைதீனுக்கு அனுமதி வழங்கப்பட்டதாக ஊராட்சி ஒன்றிய அலவலக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். உண்மையிலேயே அதன் மதிப்பு ரூ.14.50 லட்சம் தானா?400 ஆண்டுகளாக கம்பீரமாக நின்று கொண்டு இருந்த கட்டடம், விரைவில் இடித்துத் தரை மட்டமாக்கப்பட உள்ளது. ரூ.14.50 லட்சத்துக்கு இடித்துவிட ஏலம் விடப்பட்டபோதிலும், 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கட்டடமும் அதில் உள்ள பொருள்களும் உண்மையில் விலை மதிப்பிட முடியாதவை என்பதை, தேசப்பற்று மிக்க சரித்திர ஆர்வலர்கள் அறிந்து இருப்பார்கள், அதை வெறும் கட்டடமாகப் பார்க்கும் மற்றவர்கள் அறிந்து இருக்க நியாயம் இல்லைதான்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior