நெய்வேலி:
என்எல்சியில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி ஒப்பந்தத் தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெறும் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் புதன்கிழமையும் தொடர்ந்தது.
என்எல்சி நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும், ஊதிய உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தினர் நெய்வேலி ஸ்கியூ பாலத்தில் திங்கள்கிழமை முதல் காலவரையற்ற உண்ணாவிரதம் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். இந்த உண்ணாவிரதத்தின் 2-ம் நாளான செவ்வாக்கிழமை உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த ஜெயராமன் என்பவர் மயங்கியதைத் தொடர்ந்து, அவர் என்எல்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த போராட்டத்தை ஆதரித்து நெய்வேலி பாட்டாளி தொழிற்சங்க நிர்வாகிகள் பெருமாள், திலகர், ஏஞ்சலின் மோனிகா, சுப்பிரமணி மற்றும் விருத்தாசலம் முன்னாள் எம்எல்ஏ ஆர்.கோவிந்தசாமி உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினர். காவல்துறையினர் ஒருநாள் அடையாள உண்ணாவிரதத்துக்கு மட்டுமே அனுமதி வழங்கியிருந்தபோதிலும், சுமார் 65 பேர் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களை ஆதரித்து புதன்கிழமை பண்ருட்டி எம்எல்ஏ தி.வேல்முருகன் பேசவுள்ளார். கடந்த இரு தினங்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஒப்பந்தத் தொழிலாளர் சங்கத்தினர் ஈடுபட்டிருந்த போதிலும், நிர்வாகத் தரப்பிலிருந்து யாரும் அவர்களிடம் பேச்சு நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக