தந்தையை இழந்த மாணவிக்கு, இன்ஜினியரிங் கல்லூரி படிக்க ஆகும் செலவை, தமிழக அமைச்சர் ஏற்றுக்கொண்டார்.
பாளையங்கோட்டை, கொக்கிரகுளத்தை சேர்ந்த சிவகாமிநாதன் மகள் முத்துலட்சுமி. இவரது தந்தை ஓட்டல் சப்ளையர். கடந்த 8 ஆண்டுகளுக்கு முன், நோய்வாய்ப்பட்டு இறந்தார். தாய் வேலம்மாள், பீடிக்கு தாள் ஒட்டும் வேலை செய்தும், விதவைக்கான அரசின் உதவித்தொகை 400 ரூபாயை கொண்டும், முத்துலட்சுமியை படிக்க வைத்தார். பாளையங்கோட்டை மேரி சார்ஜென்ட் பள்ளியில் படித்த முத்துலட்சுமி, பிளஸ் 2 தேர்வில் 1091 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மேலும் படிக்க வசதியில்லாததால், வயிற்றுப்பாட்டிற்காக தாமும் பீடிச்சுற்ற வேண்டியிருக்குமோ என்ற பயம், முத்துலட்சுமியை வாட்டியது. அவரின் நிலையறிந்த நெல்லை கலெக்டர் ஜெயராமன், தாசில்தார் மூலம் விசாரணை நடத்தி, குடும்பத்தில் முதல் பட்டதாரி என்ற அடிப்படையிலும், அரசின் பிற உதவிகள் கிடைக்கவும் அரசுக்கு பரிந்துரைத்துள்ளார்.
இருப்பினும், கவுன்சிலிங்கில் வெளியூர் கல்லூரிகளில் "சீட்' கிடைத்தால், விடுதியில் தங்கி பயில இயலாத வறுமை. எனவே, துணைமுதல்வர் ஸ்டாலின் இணையதளத்தில், தமது நிலையை விளக்கி உதவுமாறு வேண்டுகோள் விடுத்தார். கோரிக்கையை அறிந்த ஸ்டாலின், அந்த மாணவிக்கு உதவுமாறு சுற்றுச்சூழல் அமைச்சர் டி.பி.எம்.மைதீன்கானுக்கு பரிந்துரைத்தார். மாணவி முத்துலட்சுமியின் நிலையை கேட்டறிந்த அமைச்சர் மைதீன்கான், பாளையங்கோட்டை பிரான்சிஸ் சேவியர் இன்ஜினியரிங் கல்லூரியில் இ.சி.இ., படிப்பில் சேரவும், மாணவி கல்லூரிமுடிக்கும் வரை ஆகும் செலவை, தமது சொந்த பொறுப்பில் ஏற்றுக்கொள்வதாகவும், நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். தமது மகள் மேலும் பயில வாய்ப்பு கிடைத்ததற்கு முதல்வர், துணைமுதல்வர், அமைச்சருக்கு மாணவியின் தாய் வேலம்மாள் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக