கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் குடிநீர் பற்றாக்குறையை நீக்க, பல கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் தெரிவித்தார்.
பள்ளிகளில் மரங்களை வளர்த்து பசுமைப் போர்வை ஏற்படுத்த 10 பள்ளிகளுக்கு நிதி வழங்கும் விழா, கடலூர் திருவந்திபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடந்தது.
நிகழ்ச்சியில் பள்ளி வளாகத்தில் மரங்களை நட்டு, 10 பள்ளிகளுக்கு தலா ரூ.9500 வீதம் நிதி வழங்கி, மாவட்ட ஆட்சியர் பேசியது:
உலக அளவில் பனிப்பாறைகள் உருகி, புவி வெப்பம் அதிகரித்து, தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழ்நிலை உருவாகி வருகிறது. கடலூர் மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட குடிநீர் பற்றாக்குறை காரணமாக பல கோடி ரூபாய் குடிநீர் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்டது. கடலூர் மாவட்டத்தில் மழை குறைந்து உள்ளதால், நிலத்தடி நீர் மட்டம் குறைந்து விட்டது. குடிநீர் விநியோகத்துக்காக கைப்பம்புகள், ஆழ்குழாய்க் கிணறுகள் அமைக்கப்பட்டு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.எனவே மழைப் பொழிவை அதிகப்படுத்த மரங்களை அதிகம் வளர்க்க வேண்டும். பள்ளிகளில் மரங்களை வளர்க்க, பசுமைப் போர்வைத் திட்டத்தில் கடலூர் மாவட்டத்தில், 10 பள்ளிகளுக்கு தலா ரூ.9,500 நிதி வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பள்ளியிலும் சுமார் 100 மரங்கள் நடப்பட வேண்டும்.
இது தவிர வனத்துறை மூலமாகவும் மரக்கன்றுகள் நடுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. தொண்டு நிறுவனங்கள் சமுதாய நோக்குடன் அதிக அளவில் மரங்களை நடுவதற்கு முன்வர வேண்டும் என்றார் ஆட்சியர். விழாவில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அமுதவல்லி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் சேஷாத்திரி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் டி.சேகர், மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் பழநி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக