உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஜூன் 14, 2010

ஊதிய மாற்று ஒப்பந்தம் தொடர்ந்து இழுபறி: என்.எல்.சி., தொழிலாளர்கள் போராட முடிவு

கடலூர்:

                   என்.எல்.சி., தொழிலாளர்கள் சம்பள பிரச்னையில் நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருவதால், தொழிலாளர்கள் போராட்டத்தில் குதிக்க தயாராகி வருகின்றனர். 

                     இந்தியாவில் உள்ள பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் ( என்.எல்.சி.,) 14 ஆயிரம் தொழிலாளர்களும், இன்ஜினியர் மற்றும் அதிகாரிகள் 3,800 பேரும், ஒப்பந்த தொழிலாளர்கள் 13 ஆயிரம் பேரும் பணியாற்றி வருகின்றனர். இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு 1997 ஜனவரி 1ம் தேதி ஊதிய மாற்று ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. 10 ஆண்டிற்கு முன் ஏற்படுத்தப்பட்ட இந்த ஒப்பந்தம் கடந்த 2006 டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைந்ததால் 2007 ஜன., 1ம் தேதி முதல் புதிய ஊதிய மாற்று ஒப்பந்தம் ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

                       இந்த ஒப்பந்தத்தை ஐந்தாண்டிற்கு மட்டுமே ஏற்படுத்த வேண்டும் என்ற தொழிற்சங்கங்களின் கோரிக்கையை நிர்வாகம் ஏற்றுக் கொண்டது. ஊதிய மாற்று ஒப்பந்தத்தில் ஊழியர்களின் அடிப்படை சம்பளம், அகவிலைப்படி 78.2 சதவீதம், இதன் கூட்டுத் தொகையில் 40 சதவீதம் ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். இதனுடன் "இன்கிரிமென்ட் மற்றும் சர்வீஸ் வெயிட்டேஜ்' ஆகியவற்றை அடிப்படை சம்பளத்தில் தலா 5 சதவீதம் வழங்க வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களுக்காக மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் அலவன்ஸ் வழங்க வேண்டும் என தொழிற்சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. இந்த ஊதிய மாற்று ஒப்பந்தம் தொடர்பாக கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் நிர்வாகம் அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான தொ.மு.ச., மற்றும் பாட்டாளி தொழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. முதல் கட்ட பேச்சுவார்த்தையில் "இன்கிரிமென்ட் மற்றும் சர்வீஸ் வெயிட்டேஜ்' ஆகியவற்றை அடிப்படை சம்பளத்தில் 3 சதவீதம் வழங்குவதாக நிர்வாகம் ஒப்புக் கொண்டு கடிதம் கொடுத்தது.அலவன்ஸ் மற்றும் ஊதிய மாற்று ஒப்பந்தம் குறித்து பின்னர் பேசிக் கொள்ளலாம் என நிர்வாகத் தரப்பில் கூறப்பட்டது. ஆனால், நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கங்களுக்கு இடையே நடந்த பல சுற்று பேச்சவார்த்தையில் தீர்வு ஏற்படாமல் இழுபறி நீடித்தது .ஊதிய மாற்று ஒப்பந்தத்தை ஏற்படுத்தாமல் நிர்வாகம் காலம் கடத்தி வருவதை கண்டித்து தொ.மு.ச., மற்றும் பா. தொ.ச., இணைந்து கடந்த 31ம் தேதி என்.எல்.சி., நிர்வாகத்திடம் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கியது.

                         இதன் எதிரொலியாக, மண்டல தொழிலாளர் நல கமிஷனர் ஜெகன்நாதராவ், என்.எல்.சி., நிர்வாகம் மற்றும் தொழிற்சங்கத்தினரை நேற்று முன்தினம் சென்னைக்கு அழைத்து பேச்சவார்த்தை நடத்தினார். அதில் இன்கிரிமென்ட், சர்வீஸ் வெயிட்டேஜ் மற்றும் அலவன்சை முன்தேதியிட்டு வழங்க வேண்டும் என்பதை தொழிற்சங்கங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என நிர்வாகத் தரப்பில் கூறப்பட்டது (ஆனால் அதிகாரிகள் மற்றும் இன்ஜினியர்களுக்கு மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி அலவன்சுகளை 2008 நவம்பர் மாதம் முதல் வழங்குவதாக கூறி ஊதிய மாற்றம் செய்து கடந்த ஓராண்டாக புதிய ஊதியம் பெற்று வருகின்றனர்).
 
                      இதை தொழிற்சங்கங்கள் ஏற்க மறுத்ததால் தீர்வு ஏற்படவில்லை. அதனால், தொழிற்சங்கங்கள் மற்றும் நிர்வாகமும் பேச்சுவார்த்தை நடத்தி 18 (1) ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டு வரும் 15ம் தேதி சென்னைக்கு வருமாறு அறிவுறுத்தி அனுப்பி வைத்துள்ளார். இதையடுத்து, நாளை இன்று நெய்வேலியில் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.நெய்வேலியின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக உள்ள தொழிலாளர்கள் பிரச்னைகளில் நிர்வாகம் விரைந்து தீர்வு காணவில்லையென்றால், தொழிலாளர்கள் போராட்டத்தால் மின் உற்பத்தி பாதிக்கும் நிலைக்கு தள்ளப்படும் என்பதை நிர்வாகம் கருத்தில் கொள்ள வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior