ஐஸ் கட்டிகள் பற்றாக்குறை காரணமாக பதப்படுத்த முடியாமல், கடலூர் துறைமுகத்தில் கொட்டப்பட்டு அழுகிக் கொண்டு இருக்கும் மத்தி மீன்கள். கடலூர் துறைமுகத்தில்
கடலூர்:
கடலூரில் கடுமையான மின் வெட்டு காரணமாக, ஏற்பட்டு உள்ள ஐஸ்கட்டி தட்டுப்பாட்டால், மீனவர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள்.
கடலூரில் தற்போது மத்தி மீன்கள் அதிகமாக பிடிக்கப்படுகின்றன. இவை பெரும்பாலும் கேரள மாநிலத்துக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஒரு பகுதி கடலூர், நாகை மாவட்டங்களில் உள்ள மீன் எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பப்படுகின்றன. கடலூர் துறைமுகத்தில் இருந்து வெளியிடங்களுக்குக் கொண்டு செல்லப்படும் மீன்கள், ஐஸ் கட்டிகளால் பதப்படுத்தப்பட்டு பாதுகாப்புடன் லாரிகளில் அனுப்பப்படுகின்றன. கடலூரில் இருந்து வெள்ளிக்கிழமை 100 லாரிகளில் மத்தி மீன்கள் வெளியூர்களுக்கு அனுப்பப்பட்டன.
ஆனால் போதுமான அளவுக்கு ஐஸ் கட்டிகள் கிடைக்காததால், 50 டன் மீன்களை அனுப்ப முடியாமல் துறைமுகத்தின் கரையோரப் பகுதிகளில் கொட்டி வைத்தனர். இவை சனிக்கிழமை அழுகி துர்நாற்றம் வீசத் தொடங்கின. கடற்கரையில் காய வைக்கப்பட்ட மீன்கள் கோழித் தீவனத்துக்காக, நாமக்கல் மாவட்டத்துக்கு அனுப்பப்படும் என்று மீனவர்கள் தெரிவித்தனர். இவ்வாறு கருவாட்டுக்காக ஒதுக்கப்படும் மீன்களுக்கு போதிய விலை கிடைப்பது இல்லை என்கிறார்கள். பிடிக்கப்படும் மீன்களை அன்றே வெளியிடங்களுக்குப் பாதுகாப்புடன் அனுப்ப, போதுமான ஐஸ் கட்டிகள் கடலூரில் கிடைப்பது இல்லை என்று தெரிவிக்கிறார்கள் மீன் வியாபாரிகள். கடலூரில் ஐஸ் கட்டிகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் சுமார் 15 உள்ளன. அவற்றில் இருந்து கிடைக்கும் ஐஸ் கட்டிகள், கடலூரில் அதிகமாக மத்தி மீன்கள் பிடிபடும் காலங்களில், அவற்றைப் பதப்படுத்த போதுமானதாக இல்லை என்று கூறப்படுகிறது.
மேலும் கடலூரில் கடுமையான மின் வெட்டு இருப்பதால், ஐஸ் கட்டித் தொழிற்சாலைகளின் முழு உற்பத்தித் திறன் அளவுக்கு, ஐஸ் கட்டிகளைத் தயாரிக்க முடியவில்லை என்று ஐஸ் கட்டித் தொழிற்சாலை உரிமையாளர்கள் தெரிவிக்கிறார்கள். இந்த நிலையில் கேரளத்தில் இருந்து மீன் கொள்முதல் செய்ய வரும் மீன் வியாபாரிகள், தங்களது லாரிகளில் ஐஸ் கட்டிகளையும் கொண்டு வருகிறார்கள்.
இதுகுறித்து தமிழ்நாடு மீனவர் பேரவை கடலூர் மாவட்டத் தலைவர் சுப்புராயன் கூறுகையில்,
மின் வெட்டு காரணமாக மீனவர்களுக்குத் தேவையான ஐஸ் கட்டிகளை, கடலூர் தொழிற்சாலைகளால் தயாரித்து வழங்க முடியவில்லை. ஐஸ் கட்டிகளை பாதுகாத்து வைக்கவும் கடலூரில் வசதி இல்லை. இதனால் கேரளத்தில் இருந்து மீன் கொள்முதல் செய்ய வரும் லாரிகளில் பெரும்பாலும், ஐஸ் கட்டிகளைக் கொண்டு வருகிறார்கள். வழியில் 25 சதவீதம் அளவுக்குக் கரைந்து விடும். அந்த 25 சதவீதம் ஐஸ் கட்டிகளை மட்டும் கடலூரில் வாங்கிக் கொள்கிறார்கள். ஆண்டுக்கு ரூ.200 கோடிக்கு மீன் மற்றும் அது தொடர்பான தொழில்களில் வர்த்தகம் நடைபெறும் கடலூரில், அரசு எந்த அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்கவில்லை. மீன்களைப் பதப்படுத்தி வைக்க, குளிர்சாதனக் கிடங்கு வசதிகளை அரசு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்று, நீண்டகாலமாகக் கோரிக்கை விடுத்து வருகிறோம். அதேபோல் துறைமுகத்தில் ஐஸ் கட்டிகளை சேமித்து வைக்கவும் அரசு வசதி செய்து கொடுக்க வேண்டும் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக