கடலூர் ;
கடலூர் நகர மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்த புறவழிச்சாலை திட்டம் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
இத்திட்டத்திற்காக 200 கோடி ரூபாய் செலவிட அரசு முன் வந்துள்ளது. கடலூர் நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகன நெரிசலை குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பழைய மாவட்டமாக இருந்ததால் 40 ஆண்டுகளுக்கு முன் இருந்த சாலைகளே இப்போதும் பயன்பாட்டில் உள்ளன.மிகச் சிறிய இடத்திலேயே மக்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் வாகன நெரிசல் தவிர்க்க முடியாததாகி விடுகிறது. கடலூரில் இருந்துதான் காரைக்கால், நாகப்பட்டிணம், திருச்சி, சென்னை போன்ற பெரிய நகரங்களுக்கு தொலை தூர பஸ்கள் இயக்கப்படுகின்றன. போக்குவரத்து தேவை அதிகரித்து வருவதால் வாகன நெருக்கடியும் அதிகரித்து வருகின்றன.நகரப் பகுதியில் கனரக வாகனங்கள் வந்து செல்வதால் ஏற்படும் நெரிசலைக் குறைக்க ஒவ்வொரு நகரத்திலும் புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
கடலூர் சுற்றுப் பகுதியில் உள்ள சிறிய நகரங் களான திண்டிவனம், சிதம்பரம், விருத்தாசலத்தில் புறவழிச்சாலை அமைக்கப்பட்டு விட்டன. ஆனால் போக்குவரத்து மிகுந்த கடலூரில் புறவழிச்சாலை இல்லாமல் இருப்பது பெரும் குறையாக இருந்தது. மக்கள் பிரதிநிதிகளின் முயற்சியால் கடலூரில் புறவழிச்சாலை திட்டத்திற்கு அரசு அனுமதி அளித்துள்ளது. கடலூர் நகரமே கடற்கரை ஓரத்தில் அமைந்திருப்பதால் ஆறுகள் இணையும் பகுதியாக உள்ளது. இதனால் ஏராளமான உயர் மட்ட பாலம் கட்ட வேண் டுமென்பதால் நகரத்தின் மேற்கே புறவழிச்சாலை அமைப்பதைத் தவிர வேறு வழியில்லை. எனவே, கடலூர் ஆல் பேட்டை செக்போஸ்ட்டில் துவங்கி ஆற்றுப்படுகை ஓரமாகச் சென்று குமராபுரம் ஆஞ்சநேயர் கோவில், கேப்பர் மலை வழியாக அன்னவல்லி கிராமத்தை அடைகிறது.அங்கிருந்து விருத்தாசலம், சிதம்பரம் சாலையில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தை செய்து முடிக்க நெடுஞ்சாலைத் துறை 200 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பப் பட்டுள்ளது.
அதற்கு அரசு ஒப்புக்கொண்டு திட்டம் பற்றி விரிவான அறிக்கை தருமாறு நெடுஞ்சாலைத் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த புறவழிச்சாலையினால் சிதம்பரம் மார்க்கமாக செல்வோர்களுக்கு 6 கி.மீ., வரை கூடுதல் தூரத்தை கடக்க வேண்டி இருக்கும்.அதே நேரத்தில் பண்ருட்டி, நெய்வேலி செல்பவர்களுக்கு 5 கி.மீ., தூரம் குறையும். இத்திட் டத்தில் கெடிலம் ஆற்றில் உயர்மட்ட பாலம் உட்பட 3 பாலங்கள் கட்டப்படவுள்ளன. விரைவில் இத்திட்டத்திற்காக நில ஆர்ஜிதம் செய்யும் பணி தொடங்கப்பட உள்ளது.
பழைய கஸ்டம்ஸ் சாலை :
புறவழிச்சாலைக்கு தேவையான நிலம் ஆர்ஜிதம் செய்ய வேண்டியுள்ளதால் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தை எடுத்துக் கொள்ள அரசு முடிவு செய்துள்ளது. அதாவது, ஏற்கனவே பெண்ணையாற்று கரையோரம் பழைய கஸ்டம்ஸ் சாலை என மத்திய அரசுக்கு சொந்தமான சாலை இருந்துள்ளது. இந்தச் சாலையை தற்போது புறவழிச்சாலையாக புதுப்பித்துக்கொள்ள முடிவு செய்யப் பட்டுள்ளது. ஆல்பேட்டை செக்போஸ்ட்டில் இருந்து பெண்ணையாற்று கரையோரம் முழுவதும் மத்திய அரசுக்கு சொந்தமான பகுதியாக உள்ளதால் குமராபுரம் வரை இந்த சாலைக்காக நில ஆர்ஜிதம் செய்ய வேண்டிய தேவை இருக்காது என்பதால் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக