விருத்தாசலம் பகுதியில் விற்பனை செய்யப்படும் புதிய தர்பூசணி வகை பழம்.
விருத்தாசலம்:
விருத்தாசலத்தில் பஸ் நிலையம் அருகில் "ஐஸ்பாக்ஸ்' என்ற புதிய வகை பழம் விற்பனை வரத் தொடங்கி உள்ளது. இதை முதலில் பார்த்த மக்கள் பப்பாளிப்பழம் எனக் கருதி விற்பனை செய்தவரிடம் சென்று கேட்டனர். அப்போது அவர் இது "ஐஸ்பாக்ஸ்' என்று தெரிவித்தார். இந்த பழம் பார்ப்பதற்கு பப்பாளிப் பழம் போன்ற தோற்றத்திலும், சுவையில் தர்ப்பூசணி பழத்தின் சுவையிலும் உள்ளது. "ஐஸ்பாக்ஸ்' என்ற இந்த பழத்தை, தர்ப்பூசணி என்று அழைப்பதாக விவசாயி தெரிவித்தார்.
இதுகுறித்து "ஐஸ்பாக்ஸ்' விவசாயி பிச்சைப்பிள்ளை கூறியது:
பெண்ணாடத்தை அடுத்த செம்பேரி கிராமத்தில் இந்த ஐஸ்பாக்ஸ் பழத்தை 1 ஏக்கர் பரப்பளவில் பயிர் செய்தோம். மற்ற மகசூலைக் காட்டிலும் இது எங்களுக்கு அதிக லாபம் தருவதாக உள்ளது. இந்தவகை பழம் கர்நாடக மாநிலத்தில் அதிக அளவில் பயிர் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. கடலூர் மாவட்டம் செம்பேரியிலும், விருத்தாசலத்தை அடுத்த எருமனூர் கிராமத்திலும்தான் முதல்முதலில் பயிர் செய்யப்பட்டுள்ளது. தர்ப்பூசணியைப் போன்றே இதுவும் உடலுக்கு குளிர்ச்சியைத் தரக் கூடியது. இந்த வகை பயிரை தை, பங்குனி மற்றும் சித்திரை மாதங்களில் விதைக்கலாம். நாங்கள் சித்திரை மாதத்தில் பயிர் செய்ததால் 3 மாதங்கள் ஆன நிலையில் தற்போது அறுவடை செய்து விற்பனை செய்து வருகிறோம்.
கர்நாடக மாநிலத்தில் இந்த "ஐஸ்பாக்ஸ்' பழத்துக்கு நல்ல விற்பனை உள்ளது என்று தெரிவித்தார். மேலும் கடலூர் மாவட்டத்தில் முதல்முதலாக இந்தவகை பழத்தை அறிமுகம் செய்துள்ளோம். இதற்கு பொதுமக்களிடம் நல்ல வரவேற்பு உள்ளது என்றார் அவர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக