செம்மை நெல் சாகுபடி முறையில் நாற்று நடப்படும் வயல். செம்மை நெல் சாகுபடியால் ஒரு நாற்று பல்வேறு கிளைகளாக செழித்து வளர்ந்து இருக்கும் வயல்.
கடலூர்:
அகில இந்திய அளவில் வேளாண் உற்பத்தி குறைந்து வருவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தின் பிரதான சாகுபடிப் பயிர் நெல்.
நெல் உற்பத்தியில், இந்தியாவில் 7-வது இடத்தில் தமிழகம் உள்ளது. இந்த நிலையில் கிராமப்புற வேலை உறுதித்திட்டம் செயல்படத் தொடங்கியதும், விவசாய வேலைகளுக்கு ஆட்கள் கிடைப்பது இல்லை என்ற நிலை உருவாகி விட்டது. எனவே விவசாயம் காப்பாற்றப்பட வேண்டுமானால், இயந்திர மயமாக்கல் மற்றும் நவீன தொழில் நுட்பங்கள் மூலம் உற்பத்தியைப் பெருக்குதலைத் தவிர வேறு வழியில்லை. இயந்திரங்களைப் பயன்படுத்தி, நெல் உற்பத்தியைப் பெருக்குவதில் சாதனை ஏற்படுத்திவரும் திட்டம், செம்மைநெல் சாகுபடித் திட்டம் ஆகும். 2000க்கு முன்னால் தென்னாப்பிரிக்கா அருகே மடகாஸ்கர் தீவில் செயல்படுத்தப்பட்டது இத்திட்டம்.
பின்னர் இந்தியாவிலும், 2003-க்குப் பின்னர் தமிழகத்திலும் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பாரம்பரிய விவசாயத்தில் ஒரு கிலோ நெல் உற்பத்தி செய்ய 3 ஆயிரம் லிட்டர் தண்ணீர் தேவைப்படுகிறது. வேலை ஆட்களும் அதிகம் தேவை. உற் பத்தியைப் பெருக்க, இடுபொருள் செலவுகளைக் குறைக்க, நீர்தேவையைக் குறைக்க, களைகளை உரமாக மாற்ற, நுண்ணுயிரிகளின் செயல்பாட்டை அதிகரிக்க, தழைச்சத்து தேவையைக் குறைக்க, அனைத்தும் மேலாக அதிக லாபம் அடைய செம்மை நெல் சாகுபடித் திட்டம் உதவுகிறது. இத் திட்டத்தில் விதை நெல் அளவு, ஏக்கருக்கு 30 கிலோவில் இருந்து 3 கிலோவாகக் குறைகிறது. ஏக்கருக்கு நாற்றங்கால் ஒரு சென்ட் என்ற அளவுக்கும் நாற்றுக்களின் வயது 30 நாளில் இருந்து 14 நாட்களாகவும் குறைகிறது. வழக்கமான விதைநேர்த்தி முறைகள் பின்பற்றப் படுகின்றன. நடவு வயலில் ஒரு குத்துக்கு ஒரு நாற்று மட்டுமே நடப்படுகிறது. 22.5 க்கு 22.5 செ.மீ. சதுரத்துக்கு ஒரு நாற்று நடப்பட வேண்டும். இதற்காக அளவுச் சட்டம் ஒன்றை வேளாண் துறையே வழங்குகிறது. இயந்திரம் மூலமாகோ வேலைஆள்களைக் கொண்டோ நடவு செய்யலாம். கோனோவீடர் இயந்திரம் மூலம் களைகளை அகற்றி, அங்கேயே மடித்துப்போட்டு உரமாக்கும் உத்தி இதில் கையாளப்படுகிறது. நீர்மறைய நீர் கட்டி, பாசன நீர் அளவைக் குறைக்க ஆலோசனை தெரிவிக்கப்படுகிறது. குறிப்பிட்ட பயிருக்கு, பச்சை வண்ண அட்டைமூலம் தழைச் சத்து நிர்ணயிக்கப்படுகிறது. நடப்பட்ட ஒரு தூரில் இருந்து 60 முதல் 80 செடிகள் வரை கிளைத்து அவற்றில் கதிர்கள் தோன்றுவதுதான் இம்முறை நெல் சாகுபடியின் சிறப்பு அம்சம். கடலூர் மாவட்டத்தில் நெல் உற்பத்தி சராசரி அளவு, ஏக்கருக்கு 2800 கிலோ. தமிழகத்தின் சராசரி நெல் உற்பத்தியும் அதுதான். ஆனால் செம்மைநெல் சாகுபடி மூலம் ஏக்கருக்கு 5 ஆயிரம் கிலோ நெல் உற்பத்தி செய்ய முடியும் என்கிறார்கள் வேளாண் அலுவலர்கள். எனினும் இதன் இலக்கு ஏக்கருக்கு 7 ஆயிரம் கிலோ எனவும் தெரிவிக்கிறார்கள். க டந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக, செம்மை நெல் சாகுபடி திட்டம் விவசாயிகளிடம் பெருமளவுக்குப் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது. வட்ட வாரியாக செயல்முறை விளக்க வயல்கள் அமைக்கப்படுகின்றன. இத்திட்டத்தைச் செயல்படுத்தும் விவசாயிக்கு, ஏக்கருக்கு ரூ. 2,700 மதிப்புள்ள வேளாண் கருவிகளும், ரூ. 700 மதிப்புள்ள இடுபொருள்களும் இலவசமாக வழங்கப்படுகிறது. ஆனாலும் இத்திட்டம் 35 முதல் 40 சதவீத விவசாயிகளிடம் மட்டுமே சென்றடைந்து இருப்பதாக வேளாண் துறை அதிகாரிகளே தெரிவிக்கிறார்கள். எனவே இத்திட்டம் மேலும் பல விவசாயிகளைச் சென்றடைய வேண்டும்.
யோசனைகள்:
திட்டம் குறித்து பாசிமுத்தான் ஓடை விவசாயிகள் சங்கத் தலைவர் பி.ரவீந்திரன் தெரிவிக்கும் ஆலோசனைகள்:
காவிரி டெல்டா பாசனக் கடைமடைப் பகுதிகளில் ஒற்றை நாற்றுநடவு, சற்று பின்னடைவை ஏற்படுத்துகிறது. 3 நாற்றுகள் வரை நடுகிறோம். காரணம் கடைமடைப் பகுதிகளில் வயல்களில் தண்ணீர் தேங்குதைக் கட்டுபடுத்த முடியாது. இதனால் இயந்திரம் மூலம் நடவு சிரமமாகிறது. மேலும் ஒற்றை நாற்று எளிதில் வீணாகி விடுகிறது. நாற்று நடுவோரும் பாரம்பரிய முறையில், ஒப்பந்த அடிப்படையில் நடவு செய்வதால், அவசர அவசரமாக நடும்போது நாற்றுக்களின் வேர்ப்பகுதியை பெரும்பாலும் மடித்து நட்டுவிடுகிறார்கள். இதனால் முளைப்புத் திறன் குறைந்து விடுகிறது. எனவே இத்திட்டத்தில் விவசாயிகளுக்கு பயிற்சி அளிப்பது போல் நாற்று நடும் பெண்களுக்கும் சிறப்புப் பயிற்சி அளிக்க வேண்டும். நிதானமாக நாற்று நட்டால்தான் ஒற்றை நாற்று முறை வெற்றிபெறும். எனவே நாற்று நடும் பணிக்கான செலவில் ஒரு பகுதியை விவசாயிகளுக்கு மானியமாக அரசு வழங்கலாம். காவிரி டெல்டா கடைமடைப் பகுதிகளில் இத்திட்டம் வெற்றி பெற வடிகால் வசதியை மேம்படுத்த வேண்டும் என்றார் ரவீந்திரன்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக