கடலூர் :
கடலூரில் போலீசார் நடத்திய வாகன சோதனையின் எதிரொலியாக நகரத்தில் ஷேர் ஆட்டோக்கள் இயக்கம் வெகுவாக குறைந்துள்ளது.
கடலூரில் இருந்து புதுச்சேரி மாநிலத்திற்கு ஏராளமான ஆட்டோ, ஷேர் ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நெரிசல் மிகுந்த இந்த வழித்தடத்தில் ஷேர் ஆட்டோ இயக்குவதால் பொது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது. அதே போல் ஆட்டோ உரிமையாளர்களுக்கு நல்ல வருவாயும் கிடைத்தது. இதனால் ஷேர் ஆட்டோக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தன. அத்துடன் பல ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள் சாலை வரி செலுத்தாமலும், தகுதி சான்றிதழ் பெறாமலும் இயக்கப்பட்டு வந்தன. இதை கவனிக்க வேண்டிய வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் மெத்தனமாக இருந்து வந்தனர்.
கடலூர் மாவட்டத்தில் பள்ளிக் குழந்தைகள் விபத்துக்குள்ளாகி வருவதால் போலீசார் திடீர் வாகன சோதனை நடத்தினர். அதில் ஏராளமான ஆட்டோக்கள் சாலை வரி செலுத்தாமலும், தகுதி சான்றிதழ் பெறாமலும் ஓட்டி வருவது தெரியவந்தது.போலீசாரின் இந்த நடவடிக்கையை அறிந்த சாலை வரி செலுத்தாத ஷேர் ஆட்டோ உரிமையாளர்கள் கடந்த 2 நாட்களாக ஆட்டோவை இயக்காமல் வீட்டில் நிறுத்தி வைத்துள்ளனர். இன்னும் சில ஆட்டோக்கள் பள்ளி நேரம் மட்டுமே இயக்கி வருகின்றனர். மற்ற நேரங்களில் மறைவான இடங்களில் ஆட்டோக்களில் நிறுத்தி வைத்துள்ளனர். இதனால் கடலூரில் ஷேர் ஆட்டோக்கள் ஓடுவது பிசி நேரங்களில் கணிசமாக குறைந்துள்ளன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக