பண்ருட்டி போலீஸ் லைன் சாலையில் ஏரி போல் தேங்கி நிற்கும் கழிவுநீர்.
பண்ருட்டி:
வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை மாற்று வழியில் வெளியேற்ற திட்டமிடாமல் கால்வாய் சீரமைக்கும் பணியை மேற்கொண்டுள்ளதால், சாலை முழுவதும் கழிவுநீர் தேங்கி சுகாதாரச் சீர்கேட்டையும், நோய் பரவும் சூழலையும் ஏற்படுத்தியுள்ளது.
பண்ருட்டி பஸ் நிலையத்தின் மிக அருகில் போலீஸ் லைன் அமைந்துள்ளது. நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள இப்பகுதியில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள், காவலர் குடியிருப்பு, மாரியம்மன் கோயில், துணை கண்காணிப்பாளர் அலுவலகம், மகளிர் காவல் நிலையம், மது விலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகம் மற்றும் ரேஷன் கடை மற்றும் தனியார் மருத்துவமனைகள் பல அமைந்துள்ளன. இப் பகுதிகளுக்கு செல்லும் போலீஸ் லைன் சாலையில் உள்ள கழிவுநீர் கால்வாய் பல ஆண்டுகளாக சிதலமடைந்து கிடந்தது. இந்த கால்வாய்களை சீர் செய்யும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.÷இப்பணிகளை மேற்கொண்டுள்ள ஒப்பந்ததாரர் அன்றாடம் வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை வெளியேற்ற தேவையான நடவடிக்கைகளை எடுக்காமல் கால்வாய் சீரமைக்கும் பணியை மேற்கொண்டதால், கழிவுநீர் செல்ல வழியின்றி சாலையில் ஏரி போல் தேங்கி நிற்கிறது.
இதனால் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு அலுவலகம், மகளிர் காவல் நிலையம், காவலர் குடியிருப்புகள், மாரியம்மன் கோயில் ஆகியவை தனித் தீவு போல் காட்சி அளிக்கின்றன. ÷மேலும் மேற்கண்ட இடத்துக்கு செல்பவர்கள் அனைவரும் தேங்கியுள்ள கழிவுநீரில் இறங்கி நடந்துதான் செல்ல வேண்டும். இதன் அருகே ரேஷன் கடை, துணை கண்காணிப்பாளர் அலுவலகம் அமைந்துள்ளதுடன், இவ்வழியாகத்தான் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பஸ் நிலையம் செல்லும் பொதுமக்களும் சென்று வர வேண்டும். மேற்கண்ட பகுதியில் பல நாள்களாக கழிவுநீர் தேங்கியுள்ளதால் நோய் பரப்பும் கிருமிகள் உற்பத்தியாகும் கூடமாக விளங்குகிறது. இதனால் இப்பகுதியில் குடியிருப்பவர்களும், கழிவுநீரில் நடந்துச் செல்பவர்களும் பாதிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.÷மேலும் தேங்கியுள்ள கழிவுநீரில் நோய் பரப்பும் கிருமிகள் உற்பத்தியாகாமல் இருக்க நகர சுகாதாரத் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும், இது குறித்து நகராட்சி அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக