கடலூர்:
மக்கள் பயன்பாடும், பணப்புழக்கமும் நிறைந்த, தமிழகப் பத்திரப் பதிவுத்துறை, அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 5 ஆயிரம் கோடி வருவாயை ஈட்டித் தருகிறது.
இத் துறையில், ஒரு ஐ.ஜி., 4 கூடுதல் ஐ.ஜி., 10 டி.ஐ.ஜி., 19 ஏ.ஐ.ஜி., பதவிகள், 30 துணைப் பதிவாளர், 700 சார் பதிவாளர், 1400 உதவியாளர், 900 இளநிலை உதவியாளர், 600 இரவுக் காவலர்கள் பணியிடங்கள் உள்ளன. துணைப் பதிவாளருக்குக் கீழ் உள்ள பதவிகளில் 40 சதவீதம் பணியிடங்கள் (1300 பதவிகள்) நீண்ட காலமாகக் காலியாக இருப்பதாக அரசு அலுவலர் ஒன்றியம் தெரிவிக்கிறது. ஓய்வு பெறும் அலுவலர்களுக்குப் பதில் புதிய அலுவலர்கள், உடனடியாக நியமனம் செய்யப்படுவதில்லையாம். பணிச்சுமை தவறுகளுக்கு வழிவகுக்கிறது. இதனால் 10 பேர் ஓய்வு பெற்றால் 9 பேர் மீது ஒழுங்கு நடவடிக்கை உள்ளதாம்.
அனைத்து பத்திரப் பதிவு அலுவலகங்களும் தினக் கூலிகளாக, அவ்வப்போது நியமிக்கப்படும் இரண்டு, மூன்று நபர்களால்தான் இயங்கிக் கொண்டு இருக்கிறதாம். பத்திரப் பதிவு அலுவலகங்கள் கணினிமயமாக்கப்பட்டு உள்ளன. ஆனால் அவற்றை இயக்குவற்கு நிரந்தர ஊழியர்கள் இல்லை. அலுவலர்களுக்குப் கணினிப் பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தினக் கூலியாக ரூ. 100 ஊதியம் பெற்றுக் கொண்டு பணியாற்றும், வெளியாள்கள்தான் கணினிகளை இயக்குகிறார்கள். அவர்கள் இளநிலை உதவியாளர் பணிகளையும் செய்கிறார்கள். ஒவ்வொரு பத்திரப் பதிவுக்கும் கணினிக் கட்டணம் என்று தலா ரூ. 100 வசூலிக்கிறார்கள்.
தினக்கூலி ஊழியர்கள் பொறுப்பின்றிச் செயல்படுவதால், ஏராளமான பிழைகள் ஏற்படுகிறதாம். அன்றாடம் பதிவாகும் பத்திரங்கள் கணினியில், அன்றைய தினமே பதிவு செய்யப்பட வேண்டும். ஆனால் இதில் ஏற்படும் தாமதம் காரணமாக, சொத்து வாங்கியவர்களுக்குப் பத்திரம் கிடைக்க 15 நாள்கள் வரை ஆகிறதாம். கணினியில் பதிவு செய்வதில் ஏற்படும் தவறுகள் காரணமாக, பத்திரத்தில் சில பக்கங்களே சில நேரங்களல் காணாமல் போய்விடுகிறதாம். பின்னாளில் பத்திர நகல் கேட்டு விண்ணப்பிக்கும் போதுதான், இத்தகைய பிழையைக் கண்டுபிடிக்க முடிகிறது என்கிறார்கள், பத்திரப் பதிவுத் துறையுடன் நெருங்கிய தொடர்பு உடையவர்கள். பத்திரப் பதிவு அலுவலகங்கள் பலவற்றில் சார்பதிவாளர் பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும், தலைமை எழுத்தர்கள்தான் பத்திரப் பதிவுப் பணிகளைச் செய்கிறார்கள்.
கட்டடங்களைப் பார்வையிட்டு மதிப்பீடு செய்வதிலும் காலதாமதமும், தவறுகளும் ஏற்படுகின்றனவாம். சொத்தின் மதிப்பை நிலங்களின் சர்வே எண்கள் அடிப்படையில், அரசு வழிகாட்டுதல் விலை மதிப்பின் படிதான் நிர்ணயிக்க வேண்டும் என்பது அரசாணை. ஆனால் நகர்களில் உள்ள பிளாட்டுகளின் உச்ச மதிப்பு அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படுவதாகவும், அது முறைகேடுகளுக்கு வழிவகுப்பதாகவும் கூறப்படுகிறது. இணையதளத்தில் உள்ள அரசு வழிகாட்டுதல் மதிப்பை சார்பதிவாளர்கள் ஏற்றுக் கொள்வது இல்லை. வில்லங்கச் சான்றுக்கு விண்ணப்பித்தால் அன்றே வழங்கப்படும் என்று கூறுவதும், வெறும் ஏட்டளவில்தான் உள்ளது. மிக அவசரம் என்று கூடுதல் கட்டணத்துடன், கொடுத்தால்கூட மறுநாள்தான் கிடைக்கும் என்கிறார்கள். பத்திரப் பதிவுக் கட்டணத்தை வரைவோலை மூலம் செலுத்தும் முறை, துறைத் தலைவரின் உத்தரவின் பேரில் செயல்படுத்தப்படுகிறது. ஆனால் வரைவோலை பெறுவதற்கு தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளைத் தேடி அலைய வேண்டியது உள்ளது. கிராமத்தில் இருந்து வருவோர், பிற்பகலில் பத்திரப்பதிவுக்கு வருவோர் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.
இது குறித்து மாவட்டப் பதிவாளர் வேலாயுதம் கூறியது
"பத்திரப்பதிவு அலுவலகங்களில் பணியிடங்கள் காலியாக இருப்பது உண்மைதான். சொத்து மதிப்பை நகர்களில் உள்ள பிளாட்டுகளின் உச்ச மதிப்பீடு அடிப்படையில் நிர்ணயிக்க சார்பதிவாளர்களுக்கு அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. சொத்துக்களின் அரசு வழிகாட்டுதல் மதிப்பை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். கணினி இணைப்புகள் இன்னமும் முழுமையாக இல்லாததால் கணினி மூலம் வில்லங்கச் சான்று பெறுவதில் சிக்கல் உள்ளது’ என்றார்.
பத்திரப் பதிவுத்துறை அலுவலர்கள் சங்க மாநிலத் தலைவர் செல்லதுரை (சார் பதிவாளர்) கூறுகையில்,
"பணியிடங்கள் நிறையக் காலியாக உள்ளன. அண்மையில் 340 பேர் சார் பதிவாளராகப் பதவி உயர்வு பெற்றனர். இதனால் இளநிலை உதவியாளர் நிலையில் ஏராளமான காலிப் பணிடங்கள் ஏற்படுகின்றன. அவற்றை அரசுதான் நிரப்ப வேண்டும். கணினிப் பணிகளை சார் பதிவாளர் மேற்பார்வையில்தான் வெளியாட்களைக் கொண்டு செய்கிறோம் என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக