
கடலூர்:
இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் பிரேமானந்தா சாமியார், கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். திருச்சி மாவட்டம் விராலிமலையில் ஆசிரமம் நடத்தி வந்தவர் பிரேமானந்தா சாமியார். கொலை, கற்பழிப்பு வழக்குகளில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்றவர். கடந்த 10 ஆண்டுகளாக கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். பல்வேறு நோய்களால் அவர் பாதிக்கப்பட்டு உள்ளார். அண்மையில் கண்பார்வை பாதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. கடலூர் மத்திய சிறையில் இருந்த அவருக்கு கடந்த மாதம் கடுமையான வயிற்றுவலி ஏற்பட்டது. பித்தப் பையில் கற்கள் இருப்பதாக அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து இருந்தார். மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம் பிரேமானந்தா ஒருமாதம் பரோலில் செல்ல அனுமதி வழங்கியது. கடந்த 10-ம் தேதி சிறையில் இருந்து வெளிவந்த பிரேமானந்தா, கடலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி வரை அவர் இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெறுவார் என்று கூறப்படுகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக