கடலூர்:
தமிழ்நாட்டில் சோற்றுக் கற்றாழை என்று அழைக்கப்படும் மூலிகைச்-செடி அலோவரா, பெருமளவில் உலகம் முழுவதும் அழகு சாதனப் பொருள்களில் பயன்படுத்தப்படுகிறது. சோற்றுக் கற்றாழையில் அலோயின், அலோசோன் என்ற வேதிப் பொருள்கள் 4 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை உள்ளன. இவ்வேதிப் பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் அலோவரா ஜெல், அழகுசாதனங்களுக்கான மூலப்பொருளாக பயன்படுத்தப்படுகிறது.
சூரிய ஒளியில் இருந்து வரும் கடும் வெப்பம், காமா, எக்ஸ்ரே கதிர் வீச்சுகளின் தீய விளைவுகளில் தோலை பாதுகாக்க சோற்றுக் கற்றாழை ஜெல் பயன்படுத்தப்படுகிறது. இது தோலின் நிறத்தையும் மேம்படுத்துகிறது. எனவே சோற்றுக் கற்றாழையில் இருந்து பிரித்தெடுக்கப்படும் ரசாயனப் பொருள்கள் உலகம் முழுவதும் சருமத்துக்கான லோஷன்கள், கிரீம்கள், சோப்புகள் மற்றும் ஷாம்புகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. சித்தா, ஆயுர்வேத மருத்துவங்களில் இருமல், சளி, குடல் புண் ஆகியவற்றுக்கு மருந்தாகவும், தீக்காயங்கள், வெட்டுக்காயங்கள் ஆகியவற்றுக்கு வெளிப்பூச்சு மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.
வளரும் நிலை:
25 முதல் 45 செல்ஷியஸ் வெப்ப நிலையில், கடல் மட்டத்தில் இருந்து 1000 அடி உயரத்தில் உள்ள பிரதேசங்களில் சோற்றுக் கற்றாழை நன்கு வளரும் தன்மை கொண்டது. நல்ல வடிகால் வசதி உள்ள எல்லா வகையான நிலங்களிலும் சோற்றுக் கற்றாழை நன்றாக வளரும் என்றாலும் தரிசுமண், மணற்பாங்கான நிலங்கள், பொறைமண் நிலங்களில் சிறப்பாக வளரும் என்று வேளாண்துறை பரிந்துரைக்கிறது.
இந்தியாவிலும், வெளி நாடுகளிலும் வறட்சியான பகுதிகளில் சோற்றுக் கற்றாழை வணிக ரீதியாகப் பயிரிடப்படுகிறது. இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், சீனா, தென்னாப்பிரிக்கா, இத்தாலி, கிரீஸ், உள்ளிட்ட நாடுகளில் பெருமளவு காணப்படுகிறது. இந்தியா, தென்னாப்பிரிக்கா, மேற்கு இந்தியத் தீவுகள் சோற்றுக் கற்றாழையைப் பதப்படுத்தியோ, ஜெல் தயாரித்தோ வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. இந்தியாவில் தமிழ்நாடு, ராஜஸ்தான், ஆந்திரா, குஜராத் மாநிலங்களில் அதிகமாக சோற்றுக் கற்றாழை பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் ராமநாதபுரம், நெல்லை, மதுரை, திண்டுக்கல், திருச்சி, சேலம் மாவட்டங்களில் வணிக ரீதியாக விவசாயிகள் பயிரிடுகிறார்கள்.
விதைகள் இல்லை:
சோற்றுக் கற்றாழைப் பயிரிட ஏற்ற பருவகாலம் ஜூன், ஜூலை மற்றும் செப்டம்பர், அக்டோபர் மாதங்கள் ஆகும். சோற்றுக் கற்றாழையில் பூக்கள் உற்பத்தியானாலும் அதன் மகரந்தங்கள் செயல் இழந்து விடுவதால், விதைகள் உருவாவது இல்லை. எனவே செடியின் பக்கக் கன்றுகளை பிரித்தெடுத்து, வளர்க்கப்படுகிறது. இதன்படி, 3 அடி இடைவெளிக்கு ஒரு கன்று வீதம், ஹெக்டேருக்கு 10 ஆயிரம் கன்றுகள் நடவேண்டும். நிலத்தை இருமுறை உழுது, ஏக்கருக்கு 10 டன் தொழுஉரம் இட்டு, சிறு பாத்திகளில் சோற்றுக் கற்றாழை நடவேண்டும். இலை முதிர்ச்சி அடையும்போது, ஒரளவுக்கு வறட்சியான வானிலையில் இலைகளை சேகரித்தால், அதில் தரமான ஜெல் தயாரிக்க முடியும் என்று வேளாண் துறை தெரிவிக்கிறது.
சோற்றுக் கற்றாழை இலை 80 சதவீதம் முதல் 90 சதவீதம் வரை நீர்ச்சத்து கொண்டது. எனவே விரைவில் வீணாகும் தன்மை கொண்டது. எனவே வெகுவிரைவில் ஜெல் தயாரிக்க எடுத்துச் செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது. ஏக்கருக்கு 15 டன்கள் வரை இலை கிடைக்கும். புதுவை மாநிலத்தில் உள்ள சோப்பு மற்றும் அழகு சாதனப் பொருள்கள் தயாரிக்கும் நிறுவனங்கள், கடலூர் உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்து அலோவராவைக் கொள்முதல் செய்கின்றன. திட்டக்குடி, விருத்தாசலம், பண்ருட்டி வட்டங்களில் சோற்றுக் கற்றாழைப் பயிரிட ஏற்ற தட்பவெப்ப நிலையும், தகுந்த நிலத் தன்மையும் உள்ளன. கொள்முதல் செய்யும் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்து கொண்டால், அலோவரா நல்ல லாபம் தரும் பயிர் என்கிறார்கள் வேளாண் துறையினர்.
Read more »