கடலூர் :
மக்கள் விரோத மத்திய அரசை தி.மு.க., ஆதரிப்பது துரதிருஷ்டமானது என சி.ஐ.டி.யூ., அகில இந்திய தலைவர் எம்.கே.பாந்தே பேசினார். இந்திய தொழிற் சங்க மையம் (சி.ஐ.டி.யூ.,)
தமிழ்நாடு மாநில மாநாட்டின் நிறைவு விழா பொதுக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
அரசின் கொள்கைகள் பணக் காரர்களை மேலும் பணக்காரர்களாக உயர்த்துவதாக உள்ளது.
ஏழை மக்களின் வளர்ச்சிக்கு எந்த திட்டமும் இல்லை. நேரு, லால்பகதூர் சாஸ்திரி, இந்திரா காலத்தில் எங்களுக்குள் கருத்துவேறுபாடுகள் இருந்தன. அவர்கள் மக்களுக்கு விரோதமாக செயல்படவில்லை. எந்த நாட்டையும் சார்ந்து இருக்கவில்லை. தற்போதைய காங்., அரசு அமெரிக்க அரசை சார்ந்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந் துள்ளது. அதனை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. தடை செய்ய வேண்டிய "ஆன் லைன்' வர்த்தகத்தை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதன் மூலம் முதலாளிகள் பொருட்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பன்னாட்டு நிறுவனங்கள் வருகையால் இந்தியாவில் நான்கு கோடி சிறு மற்றும் சில்லறை வியாபாரிகள் பாதிப்படைந்துள்ளனர்.
நேரு பொதுத்துறை நிறுவனங்களை உச்ச நிலைக்கு கொண்டு செல்ல பாடுபட்டார். தற்போதைய மன்மோகன் அரசு அவர் கொள்கைக்கு எதிராக பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கி வருகிறது.வங்கியில் 74 சதவீதம் நேரடி அந்நி ய முதலீடு செய்யும் திட்டம் மத்திய அரசிடம் உள்ளது. இது எதிர்காலத்திற்கு ஆபத்தானது.வேலை வாய்ப்பை உருவாக்கும் விதத்தில் அரசின் கொள்கைகள் இருக்க வேண்டும். ஆனால் அரசு வேலை நியமன தடை சட்டத்தை அமல் செய்து வருகிறது. சீனாவில் வழங்குவது போல் தொழிலாளர்களுக்கு வேலை இல்லா கால நிவாரணம் வழங்க வேண்டும்.
நாடு முழுவதும் 500 சிறப்பு பொருளாதார மண்டலங்களை மத்திய அரசு நிறுவியுள்ளது. இதனால் முதலாளிகள் வருமான வரி, கலால் வரி, சுங்க வரி கட்ட தேவை இல்லை. இது நாட்டை தனியாருக்கு தாரைவார்க்கும் செயலாகும். மக்கள் விரோத மத்திய அரசை தி.மு.க., அரசு ஆதரிப்பது துரதிருஷ்டமானது. மத்திய அரசு கண்மூடித்தனமாக தமிழக அரசை ஆதரித்து வருகிறது. இதனால் தி.மு.க., எம்.பி.,க்கள் ஊழல் செய்கின்றனர். தி.மு.க., அமைச்சர் ராஜா 60 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளார். அவர் மீது நடவடிக்கை எடுக்க இடதுசாரிகள் வலியுறுத்தின. ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை. தமிழகத்தில் சி.ஐ.டி.யூ., வலிமை மிக்க சக்தியாக உருவெடுத்துள்ளது. மார்ச் 5ம் தேதி நடக்கும் சிறை நிரப்பும் போராட்டத்தில் லட்சக்கணக்கில் தொண்டர்கள் பங்கேற்று போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறு எம்.கே.பாந்தே பேசினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக