சிதம்பரம் :
"விழுப்புரம் - மயிலாடுதுறை பயணிகள் ரயில், பிப்ரவரி இறுதி வாரத்தில் இயக்கப்படும்' என, திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். விழுப்புரம் - மயிலாடுதுறை 122 கி.மீ., தூர மீட்டர் கேஜ் பாதையை, அகலப்பாதையாக மாற்றும் பணி, 2006ம் ஆண்டு துவங்கியது. தற்போது, பணிகள் முடிந்த நிலையில், கடந்த 5ம் தேதி சரக்கு ரயில் வெள்ளோட்டம் விடப்பட்டது. மயிலாடுதுறையில் இருந்து ஒரு ரயிலும், விழுப்புரத்தில் இருந்து ஒரு ரயிலும் இயக்கப்பட்டன.
திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் சுப்ரமணியன், நேற்று, மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரம் வரை ஆய்வு மேற்கொண்டார். சிதம்பரம் நடைமேடை மற்றும் ஸ்டேஷன் பணிகளைப் பார்வையிட்டு, விரைந்து முடிக்க உத்தரவிட்டார். அவர், நிருபர்களிடம் கூறியதாவது: சரக்கு ரயிலை இயக்க முயற்சிகள் எடுத்து வருகிறோம். மொத்தமுள்ள 16 ஸ்டேஷன்களில், எட்டு இடங்களில் சோதனை பணிகள் முடிந்து விட்டன. மீதமுள்ள எட்டு ஸ்டேஷன்களில், சோதனை நடந்து வருகிறது. "கிராசிங்' கொண்ட ஏழு ஸ்டேஷன்களில், வேலைகள் நடந்து வருகின்றன. பணிகள் முடிந்ததும், பிப்ரவரி இறுதியில் பயணிகள் ரயில் இயக்கப்படும். இவ்வாறு சுப்ரமணியன் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக