கடலூர் :
கடலூர் அம்பேத்கர் நகரில் நான்கு நாட்களாக மின்சாரம் இல்லாததால் பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் 30 நிமிடம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.கடலூர் நகாரட்சி 31வது வார்டு அம்பேத்கர் நகரில் 200க்கும் மேற் பட்ட வீடுகள் உள்ளது. கடந்த 26ம் தேதி அம்பேத் கர் நகரில் இருந்த டிரான்ஸ்பார்மர் பழுதடைந்ததால் அப்பகுதி முழுவதும் மின் தடை ஏற்பட்டது. இது குறித்து மின்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
இதனால் நான்கு நாட்களாக இப்பகுதியில் மின்சாரம் இல்லாததால் பொது மக்கள் குடிநீருக்கு அவதியடைந்தனர். மேலும் பள்ளி மாணவ, மாணவிகளும் படிக்க முடியாமல் அவதியடைந் தனர். இதனையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் நேற்று காலை 8.30 மணிக்கு வண்டிப்பாளையம்-கேப்பர்மலை ரோட்டில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்த திருப்பாதிரிபுலியூர் இன்ஸ்பெக்டர் சுந்தரவடிவேலு, சப் இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தபாபு, குணசேகர் ற்றும் போலீசார் அங்கு சென்று சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் டங்கர் லாரி மூலம் தண்ணீர் வழங்கவும், டிரான்ஸ்பார்மரை சரி செய்ய நடவடிக்கை எடுக்க போலீசார் உறுதியளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது. இதனால் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது.