உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், மார்ச் 31, 2010

பூட்டிய இரண்டு வீடுகளை உடைத்து ரூ.ஒரு லட்சம் நகைகள் திருட்டு

பண்ருட்டி : 

                      பண்ருட்டியில் பூட்டிய இரண்டு வீடுகளின் கதவை உடைத்து ஒரு லட்சம் மதிப்பு தங்க நகைகளை திருடிச் சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் தேடிவருகின்றனர். பண்ருட்டி வ.உ.சி., தெருவை சேர்ந்தவர் தமிழரசி(50). சத்துணவு அமைப்பாளரான இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டை பூட்டி விட்டு தனது மகள் அகிலா வீட்டிற்கு சென்றார். நேற்று பிற்பகல் 3 மணிக்கு வீட்டிற்கு வந்தபோது முன் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த மூன்று சவரன் நகை, 200 கிராம் வெள்ளி பொருட்கள் திருடு போயிருந்தது. இதன் மதிப்பு 40 ஆயிரம் ரூபாய் ஆகும்.
 
மற்றொரு சம்பவம்: 

                       பண்ருட்டி எல்.என்.புரம் கணபதி நகரை சேர்ந்தவர் தேன்மொழி. அதேபகுதியில் உள்ள அரசு துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியரான இவர், கடந்த 26ம் தேதி வீட்டை பூட்டிக்கொண்டு சென்னை சென்றார். நேற்று மதியம் வீட்டிற்கு வந்தபோது முன்பக்க கேட் திறந்து கிடந்தது. கதவு கடப்பாறையால் உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்ததில் பீரோ திறந்து பொருட்கள் சிதறிக் கிடந்தன. அதில் வைத்திருந்த நான்கு சவரன் நகைகள் மற்றும் ரொக்கம் ரூ. 15 ஆயிரம் திருடு போயிருந்தது. இதன் மதிப்பு 60 ஆயிரம் ரூபாய்.
 
                         இதுகுறித்து தமிழரசி மற்றும் தேன் மொழி கொடுத்த புகார்களின் பேரில் பண்ருட்டி போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு தடயங்களை சேகரித்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து பூட்டை உடைத்து திருடிய மர்ம ஆசாமிகளை தேடிவருகின்றனர். பண்ருட்டில் கடந்த 19ம் தேதி இரு வீடுகளில் தம்பதியினரை தாக்கி 11 சவரன் நகைகள் கொள்ளை அடித்த சம்பவத்தை தொடர்ந்து தற்போது பூட்டிய இரண்டு வீடுகளில் திருடு போயிருப்பது அப்பகுதி மக்களை அச்சமடைய செய்துள்ளது.

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior