கடலூர் :
கடலூரில், சொத்து மற்றும் குடிநீர் வரி விதிப்பு பெயர் மாற்றம் செய்ய, நீண்ட நாள் அலைகழிப்பிற்கு பிறகு வேறு முகவரிக்கு மாற்றி குளறுபடி செய்த நகராட்சி வருவாய் ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். கடலூர் மஞ்சக்குப்பம் நேதாஜி ரோட்டைச் சேர்ந்தவர் முத்துக்கிருஷ்ணன்(45). இவர், தெற்கு கவரத்தெருவில் அருள்ஜோதி என்பவரது வீட்டை விலைக்கு வாங்கி, சொத்துவரி மற்றும் குடிநீர் வரிக்கு பெயர் மாற்றம் செய்து தரக்கோரி, கடலூர் நகராட்சி அலுவலகத்தில் மனு கொடுத்தார்.நீண்ட நாள் அலைகழிப்பிற்கு பிறகு, ஏற்கனவே அவரது பெயரில் உள்ள வேறு வீட்டிற்கு சொத்து வரி மற்றும் குடிநீர் வரிக்கு பெயர் மாற் றம் செய்து கொடுத்தனர். தான் விண்ணப்பித்த வீட்டிற்கு பெயர் மாற்றி தராமல், ஏற்கனவே தனது பெயரில் உள்ள வீட்டிற்கு பெயர் மாற்றம் செய்து கொடுத்த நகராட்சி கமிஷனர், நகராட்சிகளின் இயக்குனர், கலெக்டர் மற்றும் அரசு பணியாளர் தேர்வாணைய செயலர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, முத்துகிருஷ்ணன், கடலூர் மாவட்ட முன்சீப் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு மீதான விசாரணைக்கு, வரும் 7ம் தேதி கோர்ட்டில் ஆஜராகுமாறு நகராட்சி கமிஷனர், நகராட்சிகளின் இயக்குனர், கலெக்டர் மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர் வாணைய செயலர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
நகராட்சி கமிஷனர் குமார் கூறியதாவது:
வரிவிதிப்பு பெயரை முகவரி மாற் றம் செய்து கொடுத்தது மிகப்பெரிய தவறு. தற்போது, சம்பந்தப்பட்டவருக்கு சரியான முகவரிக்கு பெயர் மாற்றம் செய்து தயார் நிலையில் உள்ளது. அவர் கோர்ட் மூலமாக வாங்குகிறாரா அல்லது அவரே வாங்கிக் கொள்கிறாரா என தெரியவில்லை. தவறு ஏற்பட்டதற்காக சம்பந்தப்பட்ட வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன், துறை ரதியான நடவடிக்கை எடுத்து 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து வருவாய் அலுவலர் ஜெயராஜிடம் விளக்கம் கேட்கப்படும். இனி வரும் காலங்களில் சொத்து மற்றும் குடிநீர் வரி பெயர் மாற்றம் குறித்து அனைத்தும் பிறப்பு, இறப்பு சான்றிதழ் போல் கம்ப்யூட்டர் பிரிண்டில் வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.